சென்னை: வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மிக கனமழை பெய்து வருகிறது. அதேபோல் கர்நாடகா, கேரளா மாநிலங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து அந்த மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வந்துவிட்டு, மீண்டும் சென்னையில் இருந்து அந்தந்த மாநிலங்களுக்குச் செல்லும் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
அந்த விமானங்கள் தாமதமாக வருவதாலும், விமானங்கள் தாமதமாக வந்த பின்பு விமானிகளின் பணி நேரம் முடிந்து அவர்கள் ஓய்வுக்குச் சென்று விடுவதாலும், விமானங்கள் இயக்க விமானிகள் இல்லாத நிலை ஏற்பட்டு சில விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன. சில விமானங்கள் கால தாமதமாக இயக்கப்படுகின்றன.
அதேபோல் சென்னையில் இருந்து இன்று (ஜூலை 12) காலை 11:15 மணிக்கு மதுரை செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மாலை 3 மணிக்கு மதுரை செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மதுரையில் இருந்து பகல் ஒரு மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2:25 மணிக்கு சென்னை வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மற்றும் மாலை 4:40 மணிக்கு மதுரையில் புறப்பட்டு மாலை 6:05 மணிக்கு சென்னை வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 4 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.