சென்னை:சென்னை விமான நிலையப் பகுதியில் இன்று காலை ஏழு மணிக்கு மேல் திடீரென மூடுபனி ஏற்பட்டது. இதை அடுத்து சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் ஓரளவு பாதிக்கப்பட்டன. பெங்களூருவில் இருந்து 84 பயணிகளுடன் இன்று காலை 6:45 மணிக்கு சென்னை வந்த தனியார் பயணிகள் விமானம், சென்னையில் தரை இறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்தது. அதன் பின்பு அந்த விமானம் புறப்பட்டு வந்த பெங்களூருக்கே மீண்டும், திருப்பிவிடப்பட்டது.
கத்தார் நாட்டு தலைநகர் தோஹாவிலிருந்து 248 பயணிகளுடன் சென்னைக்கு இன்று காலை 7 மணிக்கு வந்துக் கொண்டு இருந்த கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் சென்னையில் தரை இறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. அதைப்போல் கோவையில் இருந்து 92 பயணிகளுடன் இன்று காலை ஏழு முப்பது மணிக்கு சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல் மீண்டும் கோவைக்கே திரும்பி சென்றது.