சென்னை:சென்னை விமான நிலையத்தில் விமானிகள் மற்றும் பயணிகளின் வருகை குறைவாக உள்ளதால், இன்று (டிச.06) சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய 11 விமானங்கள் மற்றும் 11 வருகை விமானங்கள் என மொத்தம் 22 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, 10க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் விமான நிலையங்கள் மழை நீரால் சூழ்ந்து பாதிக்கப்பட்டன. கடந்த இரண்டு நாட்களில் மழையின் அளவு குறைந்தது. இதனால் இன்று வழக்கமான விமான சேவைகள் தொடங்கிய நிலையில், விமான நிலையத்தில் போதிய விமானிகள் மற்றும் பயணிகள் வராததால் சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய 11 விமானங்கள் மற்றும் சென்னைக்கு வர வேண்டிய 11 விமானங்கள் என மொத்தம் 22 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
சென்னையில் இருந்து இன்று காலை 3 மணிக்கு இலங்கை செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், காலை 6.30 மணிக்கு விஜயவாடா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், காலை 6.45 மணிக்கு விசாகப்பட்டினம் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், காலை 8 மணிக்கு டெல்லி, 8.10 மணிக்கு கொச்சி, 8.45 மணிக்கு பெங்களூர், 9.05 மணிக்கு திருவனந்தபுரம், 9.45 மணிக்கு புனே, 10.10 மணிக்கு கோவை மற்றும் பகல் 1.15 மணிக்கு சூரத், 1.25 மணிக்கு வாரணாசி ஆகிய 11 புறப்பாடு விமானங்கள் மற்றும் சென்னைக்கு வர வேண்டிய 11 விமானங்கள் என மொத்தம் 22 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.