தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 26, 2023, 10:26 AM IST

ETV Bharat / state

சென்னை - சீரடி விமானம் ரத்து: பயணிகள் உள்ளிருப்பு போராட்டம்!

சென்னையில் இருந்து நேற்று பிற்பகல் சீரடி செல்ல வேண்டிய தனியார் பயணிகள் விமானம் கால தாமதம் என்று அறிவித்துவிட்டு, திடீரென விமானம் ரத்து என்று அறிவித்ததால், அந்த விமானத்தில் பயணிக்கவிருந்த 154 பயணிகள், சென்னை விமான நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

அ
Etv Bharatஅ

சென்னை:சென்னையில் இருந்து சீரடி செல்லும் (ஸ்பைஸ் ஜெட்) தனியார் பயணிகள் விமானம் நேற்று பிற்பகல் 2:20 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து சீரடி புறப்பட்டுச் செல்ல இருந்தது. இந்த விமானத்தில் 154 பயணிகள் பயணிக்க இருந்தனர்.

அந்தப் பயணிகள் அனைவரும் பகல் ஒரு மணிக்கு முன்னதாகவே சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்து காத்திருந்தனர். ஆனால் விமானம் கால தாமதமாக மாலை 4 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அனைவரும் பாதுகாப்பு சோதனை போன்றவைகளுக்காக சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

ஆனால் திடீரென சீரடியில் மோசமான வானிலை நிலவுவதால், விமானம் சீரடி செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று அந்த தனியார் விமான நிறுவனம் விமானம் ரத்து செய்யப்படுகிறது என அறிவித்தது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், தனியார் விமான நிறுவன அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ”விமானம் ரத்து என்பதை நீங்கள் நேற்று மதியமே சொல்லியிருந்தால் நாங்கள் பெங்களூரு வழியாக மாற்று விமானத்தில் சீரடி சென்றிருப்போம். ஆனால் கால தாமதம் என்று அறிவித்துவிட்டு, கடைசி நேரத்தில் விமானம் ரத்து என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்”. என்று வாதிட்டனர்.

மேலும் சீரடியில் உள்ளவர்களிடம் நாங்கள் செல்போனில் விசாரித்த போது அங்கு வானிலை தெளிவாக இருப்பதாக கூறுகின்றனர். எனவே எப்படியும் விமானத்தை இயக்க வேண்டும் என்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்து விமான நிலையத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், போலீசார், விமான நிலைய அதிகாரிகள், தனியார் விமான நிறுவன அதிகாரிகள் பயணிகளிடம் வந்து பேசி சமரசம் செய்தனர்.

அதன் பின்பு சீரடி செல்ல வேண்டிய விமானம் கால தாமதமாக மாலை 6:30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் என்று அறிவித்தனர். அதோடு பயணிகளுக்கு போர்டிங் பாஸ்கள் வழங்கி பாதுகாப்பு சோதனையும் நடத்தினர். இந்த நிலையில் மாலை 6:30 மணிக்கு புறப்படும் விமானம் இரவில் சீரடியில் சென்று தரை இறங்க முடியாது என்பதால் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டது.

இதையடுத்து நேற்று இரவு 7 மணிக்கு சென்னையில் இருந்து நாசிக் செல்லும் அதே தனியார் பயணிகள் விமானத்தில் அவசரமாக சீரடி செல்லும் பயணிகளை அனுப்பி வைப்பது என்றும், அங்கிருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சீரடிக்கு சாலை வழியாக வாகனத்தில் அழைத்துச் செல்வது என்றும் கூறப்பட்டது. சென்னையில் இருந்து நேரடியாக சீரடி செல்ல விரும்பும் பயணிகள் இன்று விமானத்தில் செல்ல முடிவு செய்யப்பட்டது. இதனால் பயணிகள் ஓரளவு அமைதி அடைந்தனர். இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:'அரசு நிலங்களின் குத்தகை விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்க' - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details