சென்னை:நுங்கம்பாக்கம் பகுதியில் கஞ்சா கேக் என்ற புதிய வகை போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாக நுங்கம்பாக்கம் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் கஞ்சா கேக் வாங்குவதுபோல, சென்று நுங்கம்பாக்கத்தைச்சேர்ந்த ரோஷன்(27) என்பவரை கையும் களவுமாக பிடித்தனர்.
அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது ரோஷன் நுங்கம்பாக்கத்தில் உணவுக் கடை நடத்தி வருவதாகவும், அவரும் அவரது நண்பரான டாட்டூக்கடை நடத்தி வரும் தாமஸ் என்பவரும் இணைந்து கஞ்சா கேக் தயாரித்து விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது.
இதனையடுத்து நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த தாமஸ்(26) என்பவரை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களிடமும் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
இவர்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும் டீஜே பார்ட்டிகளில் கஞ்சா கேக்குடன் உயர் ரக போதை மாத்திரை, உயர் ரக போதை ஸ்டாம்ப் ஆகியவற்றை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இவர்கள் தங்கள் நண்பர்களோடு இணைந்து போதை மாத்திரையை வெளிமாநிலங்களில் இருந்து வாங்கி அவற்றை சென்னையில் பல மடங்கு லாபம் வைத்து, விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் படி காரனோடையைச் சேர்ந்த ஆர்க்கிடெக் மாணவரான கார்த்திக்(24), பொன்னேரியைச் சேர்ந்த எம்.எஸ்.சி மாணவரான ஆகாஷ் (22), பொன்னேரியைச் சேர்ந்த பி.டெக் மாணவரான பவன் கல்யாண் (24) ஆகியோரை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
கஞ்சா கேக் என்ற புதிய வகை போதைப்பொருள் விற்ற 5 பேர் கைது! விசாரணையில் ரோஷன் மற்றும் தாமஸ் ஆகியோர் குறைவான விலைக்கு கஞ்சா வாங்கி, அதனை யாருக்கும் சந்தேகம் வராதபடி சாப்பிடும் கேக்குடன் இணைத்து கஞ்சா கேக் செய்து விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இப்படி செய்யப்படும் கஞ்சா கேக் ஒன்றுக்கு மூவாயிரம் ரூபாய் வரை கல்லூரி மாணவர்களிடம் வசூல் செய்து வந்துள்ளனர்.
அதேபோல இவர்களது நண்பர்களான கார்த்திக், ஆகாஷ், பவன் கல்யாண் ஆகியோர் பட்டப்படிப்பு படித்துள்ளதால் படிப்பறிவை வைத்து பெங்களூரு, ஹைதராபாத் போன்ற பகுதிகளில் உயர் ரக போதைப் பொருட்கள் இருக்கும் இடங்களை தெரிந்துகொண்டு, உயர் ரக போதை மாத்திரைகள், உயர் ரக போதை ஸ்டாம்ப்கள் ஆகியவற்றை ஆன்லைனில் ஆர்டர் செய்து பின் ஆகாஷ், கார்த்திக் ஆகியோர் இருசக்கர வாகனங்கள் மூலம் நேரடியாக சென்று பெற்று வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
ஒரு போதை மாத்திரையை ரூ. 1300-க்கு வாங்கி அதனை 3000 வரையிலும், அதே போல உயர்ரக போதை ஸ்டாம்ப் ஒன்றை ரூபாய் 1000-க்கு வாங்கி, அதனை ரூ.2800 வரையிலும் விற்பனை செய்து வந்துள்ளனர். டாட்டூ கடை நடத்தி வரும் தாமஸ் என்பவரது கடைக்கு டாட்டூ போட வரும் ஆண்கள் மற்றும் பெண்களை குறி வைத்து, தங்களுக்கான வாடிக்கையாளர்களாக தாமஸ் மாற்றி விற்பனை செய்து வந்துள்ளார்.
மேலும் அவர்கள் மூலம் கிடைத்த வாடிக்கையாளர்களைப் பிடித்து கடந்த இரண்டு ஆண்டு காலமாக இவர்கள் கஞ்சா கேக், உயர் ரக போதை மாத்திரைகள், உயர் ரக போதை ஸ்டாம்ப் ஆகியவற்றை விற்பனை செய்து வந்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 33 உயர் ரக போதை மாத்திரைகள், 19 உயர் ரக போதை ஸ்டாம்ப்கள், 10 கஞ்சா கேக்குகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்த நுங்கம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு