சென்னை:பெரியமேடு எம்.வி பத்ரன் தெருவில் தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்திற்கு நேற்றிரவு பெரியமேடு பகுதியை சேர்ந்த அன்சர் என்பவர் சாப்பிட வந்துள்ளார். அப்போது திடீரென அந்த உணவகத்திற்குள் புகுந்த கஞ்சா போதை கும்பல் ஒன்று இளைஞர் அன்சரை தாக்கியுள்ளது. பின்னர் உணவகத்திற்குள் இருந்த பொருட்களை போதை ஆசாமிகள் உடைத்து தூக்கி எறிந்து அராஜகத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக ஓட்டல் உரிமையாளர் ரியாஸ் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையே போதை ஆசாமிகள் அட்டூழியத்தில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் வெளியானது. இதில் உணவகத்திற்குள் புகுந்த கும்பல் அன்சரை தாக்கி, கடையில் இருந்த பொருட்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை உடைப்பது பதிவாகி இருந்தது.