சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம், தண்டுரை, பிள்ளையார் கோயில் தெருவில் மீன் மார்க்கெட் உள்ளது.
இங்குள்ள 58 கடைகளில் மீன், கருவாடு மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. ஆவடி, பட்டாபிராம், சோராஞ்சேரி, சித்துக்காடு, அன்னம்பேடு, கருணாகரசேரி, மிட்டினமல்லி, முத்தாபுதுப்பேட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் இந்த மார்க்கெட்டிற்கு சென்றுதான் மீன்கள், காய்கறிகளை வாங்கி சென்று வந்தனர்.
இங்கு தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும், ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாள்களில் மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் பொருள்கள் வாங்கி செல்வது வழக்கம்.
இந்த மார்க்கெட் குறுகிய இடத்தில் இருப்பதால், பொதுமக்கள் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க முடியதாத காரணத்தால், கரோனா தொற்று நோய் பரவலை தடுப்பதற்காக கடந்த மே மாதம் மார்கெட்டை மாநகராட்சி நிர்வாகம் மூடியது.
இதனால் இங்கு வியாபராம் செய்தவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சில வியாபாரிகள் தண்டுரை மெயின் ரோட்டில் ஆங்காங்கே மீன்களை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். மேலும், வெயில், மழையால் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். இதோடு மட்டுமல்லாமல், வெயிலால் மீன்கள் கெட்டு விடுகின்றன.