சென்னை:இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 47 போ், தமிழ்நாடு அரசு முயற்சியால் விடுவிக்கப்பட்டு, இரண்டு மாதங்களுக்குப் பின்னர் இலங்கையிலிருந்து விமானம் மூலம் இன்று (பிப்ரவரி 18) காலை சென்னை வந்தடைந்தனர்.
அவர்களை தமிழ்நாடு மீன்வளத்துறை அலுவலர்கள் சென்னை விமானநிலையத்தில் வரவேற்று, தனி வேன்களில் ராமேஸ்வரம், புதுக்கோட்டைக்கு அழைத்து சென்றனர். தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இயந்திரப் படகுகளில் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது டிசம்பர் 18ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில், தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்துப் பிடித்து, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, அவர்களைக் கைது செய்தனர். அதைப்போன்று, அவர்கள் அதற்கு மறுநாளும் தமிழ்நாடு மீனவர்களைக் கைது செய்தனர்.
அடுத்தடுத்து இரண்டு தினங்களில் ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த 56 மீனவர்களைக் கைது செய்து, 9 படகுகள், கடலில் பிடித்த மீன்கள், மீன்பிடி சாதனங்கள் போன்றவர்களையும் பறிமுதல் செய்து இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
முதலமைச்சருக்குக் கோரிக்கை!
அடுத்தடுத்து இரண்டு நாள்களில் இலங்கை கடற்படையினர், தமிழ்நாடு மீனவர்களை ஒட்டுமொத்தமாக 56 பேரைக் கைது செய்தது மீனவக் குடும்பங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மீனவர்களின் விடுதலை குறித்து, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து தமிழ்நாடு அரசு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியது. உடனடியாக மத்திய அரசும், தமிழிநாடு அரசும் மீனவர்கள் விடுதலைக்காக நடவடிக்கை எடுத்தது.
இதன்பின்னர், கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாடு மீனவர்கள் 56 பேரையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. 56 மீனவர்களும் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அலுவலர்களின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டனர்.
தமிழ்நாடு மீனவர்களுக்கு கரோனா!
தமிழ்நாடு மீனவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து, இந்தியாவுக்கு அனுப்ப இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் நடவடிக்கை எடுத்தது. இதில், தமிழ்நாடு மீனவர்கள் பலருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது பரிசோதனையில் தெரியவந்தது.