சென்னை:தேசிய கடல் மீன்வள மசோதாவை திரும்பப் பெறக் கோரி, பல்வேறு மீனவர்கள் சங்கத்தினர், சென்னை பட்டினப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு புதுச்சேரி மீனவர் அமைப்பு நிர்வாகி கோசுமணி, "மக்களவையில் மீனவர்களுக்கு எதிராக தேசிய கடல் மீன்வள சட்ட மசோதா 2021-ஐ மத்திய அரசு கொண்டு வருவதற்கு முயற்சி செய்து வருகிறது.
கடலுக்கு செல்ல அரசிடம் அனுமதியா?
இந்தச் சட்டம் மீனவ சமுதாயத்துக்கு எதிராக உள்ளது. எங்களது உரிமை வாழ்வாதாரம் என அனைத்தையும் பறிக்கக்கூடிய சட்டமாக இருக்கிறது.
இந்தச் சட்டத்திடம் அனுமதிபெற்றுதான் கடலுக்கு செல்ல வேண்டுமென்று சொல்லுகின்றது. எங்களுடைய பாரம்பரியமான கடலுக்கு நாங்கள் செல்வதற்கு அனுமதி பெற வேண்டும் என்று சொல்கிறது மிக கொடூரமானது.
மேலும் எந்த வலை கடலுக்குள் போடப்படுகிறது என்பதை அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்று அந்த சட்டம் சொல்கிறது. எங்களிடம் நூற்றுக்கணக்கான வலைகள் உள்ளன. கடலின் ஓட்டம், காற்று முதலியவற்றை பொருத்தே நாங்கள் எந்த வலை போடுவது என்று முடிவு எடுப்போம்.
மீன்வள மசோதாவுக்கு எதிர்ப்பு... கடலை தாரை வாக்க முயற்ச்சி
இதுபோன்று சட்டங்களை கொண்டுவந்து தனியார் நிறுவனங்களுக்கும், பெரும் வியாபாரிகளுக்கும் கடலை தாரை வார்த்து கொடுப்பதற்கான வேலையை அரசு செய்து வருகிறது.
12 நாட்டிக்கல் முதல் 200 நாட்டிகல் வரை இருக்கக்கூடிய இந்திய கடல் பகுதியை குத்தகைக்கு விடப்படும் யார் வேண்டுமானாலும் குத்தகைக்கு எடுத்துக் கொள்ளலாம் எனவும்; 12 நாட்டிக்கல் மைலுக்குள் மட்டும் தான் மீன் பிடிக்கலாம், அதற்கு மேல் சென்றால் அபராதம், சிறை தண்டனை என்றும் அரசு சொல்கிறது. நாங்கள் மீனவர்கள். தப்பான தொழில் செய்வதற்காக கடலுக்குள் செல்லவில்லை.
எனவே இதனை எதிர்த்து நின்று போராட்டத்தில் இறங்கி இருக்கிறோம். தமிழ்நாடு அரசு இந்த மசோதாவை எதிர்த்து தீர்மானத்தை நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த சட்ட மசோதாவை திரும்ப பெற வில்லை என்றால் இந்தியாவில் இருக்கும் அனைத்து துறைமுகத்தையும் முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவோம்" என்றார்.
இதையும் படிங்க: ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்ய மனு!