சென்னை:மீன் உற்பத்தியைப் பெருக்கவும், கடல் மாசுபடுவதை தடுக்கவும் ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மொத்தம் 61 நாட்கள் மீன்பிடி தொழிலுக்கு அரசு தடைபோடுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டு விதிக்கப்பட்ட தடை உத்தரவு இன்றோடு முடிவடைகிறது.
மீனவர்கள் மீன் பிடிக்க தயாராகிவிட்ட நிலையில், டீசல் விலை, ஊரடங்கு பெரும் தடையாக இருப்பதாக மீனவர்கள் கவலைத் தெரிவிக்கின்றனர். மேலும், சில மீனவர்கள் அடுத்த மாதம் மீன்பிடித் தொழிலை தொடங்கலாம் என முடிவெடுத்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.
டீசல் விலை தற்போது 90ஐ தாண்டிவிட்டது. இன்னும் சில நாள்களில் 100 ரூபாயை தொட்டுவிடும். இது மீனவர்களுக்கு பெரும் வேதனையை அளித்துள்ளது.
முடிவுக்கு வந்த மீன்பிடித்தடைக்காலம்: மகிழ்வடையாத மீனவர்கள் மீன் வகைகளை ஏற்றுமதி செய்ய ஒரு கட்டமைப்பு வசதி இல்லை. இந்தியாவில் கரோனா தொற்று அதிகமாக உளளதால் பிற நாடுகள் இந்தியாவில் இருந்து வரும் கடல்சார் மீன் வகைகளை வாங்குமா? என்ற கேள்வியும் மீனவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மாநில அரசிடம் கோரிக்கை
தென்னிந்திய மீனவர் நலச்சங்கத்தின் தலைவர் கே. பாரதி நம்மிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் கிழக்கு கடற்கரைப் பகுதியில் உள்ள அனைத்து மீனவர்களும் இன்று நள்ளிரவு மீன் பிடிக்க செல்லவிருக்கின்றனர். சென்னையில் உள்ள மீனவர்களும் தங்களது விசைப்படகுகளில் டீசலையும், ஐஸ்களையும் நிரப்பி தயாராக உள்ளார்கள்.
கடற்கரையில் கிடத்தப்பட்டுள்ள வலை வழக்கமாக மீன்பிடித் தடைக்காலம் முடிந்து கடலுக்குச் செல்லும் மீனவர்களிடம் மகிழ்ச்சியிருக்கும். ஆனால், இன்றைக்கு கரோனா தொற்றால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால், மீனவர்கள் தாங்கள் பிடித்துவரும் மீன்களை உள்ளூர் சந்தைகளிலும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்கும் ஒரு கடினமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது" என்றார்.
தமிழ்நாடு அரசு டீசல் விலையைக் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்திய அவர், திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி டீசல் விலையைக் குறைக்கவேண்டும் என்றும் டீசலுக்கு கொடுக்கக்கூடிய மானியத்தை உயர்த்தித்தரவேண்டும் என்றும் தெரிவித்தார்.
கடலில் சாலை வரி எதற்கு?
தெற்காசிய மீனவத் தோழமை இயக்கத்தின் பொதுச் செயலாளரும், கன்னியாகுமரியைச் சேர்ந்தவருமான அருட்திரு சர்ச்சில், "தற்போது விற்பனை செய்யப்படக்கூடிய டீசல், பெட்ரோலில் லிட்டருக்கு 18 ரூபாய் சாலை வரியாகவும், பசுமை வரியாகவும் வசூலிக்கப்படுகிறது. கடலில் என்ன சாலையா இருக்கிறது? எனவே, மீனவர்கள் வாங்கும் டீசலுக்கு சாலை வரி வாங்குவது மீனவர்களே ஏமாற்றும் செயல் என்றார்.
நிறுத்திவைக்கப்பட்டுள்ள படகுகள் மீன்வளத்துறைச் செயலாளர் டி.எஸ். ஜவகரிடம் இது தொடர்பாக நாம் பேசியபோது, மீனவர்களின் வாழ்வாதரம் பாதிக்கப்படாமல் இருக்க எல்லை வகையிலும் நடவடிக்கை எடுப்போம் என்றார்.
தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட மீனவர்கள் சுமார் 10லட்சம் மீனவர்கள் இருந்தாலும், மீனவ சங்கப் பிரதிநிதிகளின் கருத்துப்படி சற்றேறக்குறைய 40 லட்சம் மீனவர்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஆதம்பாக்கத்தில் தொடங்கி கன்னியாகுமரி மாவட்டத்தின் நீரோடி மீனவ கிராமம் வரை 1,076 கி.மீ நீளம் கடற்கரை பகுதி உள்ளது. இந்தப்பகுதியில் 14 மாவட்டங்களில் 608 மீனவ கிராமங்கள் உள்ளன.
இதையும் படிங்க:படகு மராமத்துப் பணிகளுக்காக ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் - மீனவ சங்கங்கள்!