சென்னை:நீலகிரி மாவட்டம், தெப்பக்காடு யானைகள் முகாமில் முதல் பெண் காவடியாக(யானை பராமரிப்பாளர்) பெள்ளியை நியமித்து பணி நியமன ஆணை வழங்கினார், முதலமைச்சர் மு.க ஸ்டாலின். தாயைப் பிரிந்த யானை குட்டிகளை பராமரித்துவரும் பழங்குடி தம்பதி குறித்த 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதினை வென்றது. உலக அளவில் பெரிதும் வரவேற்கப்பட்ட இந்தப் படம் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது எனக்கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதில் நடித்த பொம்மன் மற்றும் பெள்ளிக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகையும் வழங்கி இருந்தார்.
அதனைத் தொடர்ந்து தற்போது பெள்ளிக்கு அரசு பணிக்கான நியமன ஆணை வழங்கியுள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் முதல் பெண் யானை பராமரிப்பாளராக அரசால் நியமிக்கப்பட்ட பெண் என்ற பெருமையை பெள்ளி பெற்றுள்ளார். அவருக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ''தெப்பக்காடு யானைகள் முகாமில் முதல் பெண் காவடியாக (யானை பராமரிப்பாளர்) நியமிக்கப்பட்டுள்ள திருமதி வி.பெள்ளி அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின், பணிநியமன ஆணை வழங்கினார்.
தலைமைச் செயலகத்தில், வனத்துறை சார்பில் நீலகிரி மாவட்டம், தெப்பக்காடு யானைகள் முகாமில் முதல் பெண் காவடியாக (யானை பராமரிப்பாளர்) நியமிக்கப்பட்டுள்ள பெள்ளிக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் ஆசியாவிலேயே பழமையான யானைகள் முகாம்களில் ஒன்றாகத் திகழ்கிறது. ஒவ்வொரு யானையும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒரு பாகன் மற்றும் காவடியால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. முகாம்களில் உள்ள யானைகளை, தனிக் கவனத்துடன் பராமரித்து வருகின்றனர்.
அவர்கள் பாகன்கள் மற்றும் காவடிகளின் பணிகளைப் பாராட்டும் விதமாக தமிழ்நாடு அரசு முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பாகன்கள் மற்றும் காவடிகளுக்கு தலா ரூ.1 இலட்சம் வழங்கியுள்ளதோடு, சூழலுக்கியைந்த சமூக இணக்கமான வீடுகள் ரூ.9.10 கோடி செலவில் கட்டட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான அரசாணையும் பிறக்கப்பட்டுள்ளது.