சென்னை: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று (டிச.14) காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்பு திட்டச் செயலாக்கத் துறை, வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள் ஆகிய ஐந்து துறைகளுக்கு அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகம் வந்த அவர், தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு அறையில் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். மூத்த அமைச்சர் துரைமுருகன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை இருக்கையில் அமர வைத்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவிக்க திமுக நிர்வாகிகள் திரண்டு வந்து அவருக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.
அமைச்சர் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டு பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையிலும், விளையாட்டு வீரர்களின் நலனிற்காகவும் மூன்று முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டார்.
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 44வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவின் போது,"ஒலிம்பிக் விளையாட்டுகள் மற்றும் கபடி, சிலம்பாட்டம் ஆகிய இரண்டு பாரம்பரிய விளையாட்டுகளுக்காக மாநில மற்றும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் விரைவில் நடத்தப்படும் என்று அறிவித்தார்கள்.
அந்த அறிவிப்பிற்கிணங்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் 2022-2023ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தின் தொன்மையான பாரம்பரிய விளையாட்டுகளான கபடி மற்றும் சிலம்பாட்டத்தினைச் சேர்த்திடவும், முந்தைய காலங்களில் ஒரே ஒரு பிரிவில் மட்டுமே 10 விளையாட்டுக்களில் மாநில போட்டிகள் நடத்தப்பட்டன.
தற்போது பாரம்பரிய விளையாட்டுக்களும் இடம்பெறும் வகையிலும், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் அரசு ஊழியர்கள் என அனைவரையும் உள்ளடக்கி, 16 பிரிவுகளில் போட்டிகள் நடத்திடும் வகையிலும், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை ரூ.47 கோடியே 4 இலட்சத்து 72 ஆயிரத்து 800 செலவில் நடத்திடவும். இப்போட்டிகளை சிறப்பாக நடத்திட மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழு, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக்குழு மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்தும் குழு ஆகிய குழுக்களை அமைத்திட கோரும் கோப்பில் கையொப்பமிட்டார்.