பொறியியல், வேளாண்மை, சட்டம், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் சேர்வதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஆராய டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது.
அதில், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் மிகக் குறைந்த அளவிலேயே சேர்ந்துவந்தனர். இதனை நிவர்த்திசெய்வதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழுவின் பரிந்துரையை ஏற்று கடந்த கல்வியாண்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதன் மூலம் 443 மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்ந்தனர்.
இதேபோல் அரசுப் பள்ளி மாணவர்கள் பொறியியல், கால்நடை, மீன்வளம், சட்டம் வேளாண்மை உள்ளிட்ட தொழில் படிப்புகளில் சேருபவர்களில் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்துவருகிறது.
இவற்றை நிவர்த்திசெய்ய வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலிருந்து அரசுக்குக் கோரிக்கைவைத்தனர். அதனை ஏற்று டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.