சென்னை:கர்நாடக மாநிலத்தைச்சேர்ந்தவர் கிருஷ்ணா துபே (64). இவர் ஒன்றிய அரசின் சென்ட்ரல் எக்சைஸ் பிரிவில் உயர் அலுவலராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். கிருஷ்ணா துபே, கடந்த சில தினங்களுக்கு முன் குடும்பத்தினா் 5 பேருடன் இஸ்ரேல் நாட்டிற்குச் சுற்றுலா சென்றனா். அதன்பின்பு சுற்றுலாவை முடித்துவிட்டு இஸ்ரேல் நாட்டிலிருந்து துபாய் வந்து, அங்கிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னை வந்தனா்.
சென்னையிலிருந்து உள்நாட்டு விமானத்தில் பெங்களூரு செல்வதற்காக சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்குச் சென்றனர். அங்கு இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் ஏறுவதற்கு முன்னதாக சென்னை விமான நிலையப் பாதுகாப்பு அலுவலர்கள் அவர்களை சோதனை நடத்தினா். அப்போது கிருஷ்ணா துபேவின் 5 வயது பேத்தியின் கைப்பையில் இருந்து வெடிகுண்டு இருப்பதற்கான எச்சரிக்கை மணி ஒலித்தது.
இதையடுத்து அந்த அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு அலுவலர்கள் உடனடியாக கிருஷ்ண துபேயின் குடும்பத்தினரை நிறுத்தி, அந்த ஐந்து வயது பெண் குழந்தை வைத்திருந்த கைப்பையினை தனியே எடுத்து வைத்து, பாதுகாப்பாக பிரித்து பார்த்தனா். அதனுள் வெடிக்காத ஒரு துப்பாக்கி குண்டு இருந்ததைக் கண்டுபிடித்தனா். இதையடுத்து பாதுகாப்பு அலுவலர்கள் அந்த குண்டைப் பறிமுதல் செய்தனா். அதோடு கிருஷ்ணா துபேயின் குடும்பத்தினா் பயணங்களை ரத்து செய்தனா்.