சென்னை:கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீபாவளி தீக்காய உள்நோயாளிகள் பிரிவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அடிப்படை உயிர் காக்கும் முறைகள் மற்றும் விபத்தினால் காயம் அடைந்தவர்களை பாதுகாக்கும் முறைகள் ஆகிய வசதிகளை பார்வையிட்டு, உலக விபத்து விழிப்புணர்வு தின உறுதிமொழியேற்று, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின் செயல்பாடு விளக்கத்தைப் பார்வையிட்டார்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1973ஆம் ஆண்டு 75 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு தீக்காய பிரிவு தொடங்கப்பட்டது. 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் தீக்காயம் ஏற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது.
தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் சிகிச்சைப் பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த மருத்துவமனையில் 24 மணி நேரமும் அறுவை அரங்குகள் செயல்பட்டு வருகின்றன. நோயாளிகளுக்கு தேவைக்கேற்ப அவசர அறுவை சிகிச்சை முறைகளும் செய்யப்பட்டு வருகின்றன.