அண்ணனூர் ரயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து சென்னை:ஆவடி அடுத்த அண்ணனூர் ரயில் நிலையத்தின் டிக்கெட் கவுண்டரில் நேற்று (டிச.13) திடீரென தீ விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது அப்பகுதி மக்கள் மற்றும் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, ஆவடி அருகே அண்ணனூர் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு ரயில்வே பணிமனையும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று இரவு ரயில் நிலையத்தின் டிக்கெட் கவுண்டரில் திடிரென தீ பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் பயணிகள் தீ விபத்தில் இருந்து தப்பிச் சென்றனர். இதனையடுத்து, தீ விபத்து குறித்து, ஆவடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்படி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் வருவதற்குள், டிக்கெட் கவுண்டரில் பிடித்த தீயானது மள மளவென்று பற்றி எரியத் தொடங்கியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறை வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு தீயை அணைத்தனர். ஆனால், இங்கு ஏற்பட்ட தீ விபத்தில், மின் சாதனப் பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின. விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், தீ விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி ரயில்வே போலீசார், தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். இதன் முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தீ விபத்து காரணமாக, அண்ணனூர் ரயில் நிலையத்தில் மின்சாரம் இல்லாததால், ரயில் நிலையம் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பயணிகளுக்கு டிக்கெட் வெளியில் வைத்து கொடுக்கப்படுகிறது. இந்த தீ விபத்து சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் பயணிகளிடையே பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:எண்ணூரும், எண்ணெய் கசிவும்.. பாதிப்புக்கு உள்ளாகும் பல்லுயிரினங்கள்!