சென்னை:மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் டிசம்பர் 4ஆம் தேதி கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் பெய்த அதிகனமழையால் சாலைகள், குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
புயல் தாக்கத்தால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், அங்கிருந்து படகுகள் மூலமாக வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டும் வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலமாக மக்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியும், நிவாரணப் பொருட்களை வழங்கும் பணியும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திருவேற்காடு அருகே ராஜாங்குப்பம் மெட்ரோ சிட்டி நகர் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால், அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அப்பகுதி மக்களை, அம்பத்தூர் தீயணைப்புத் துறை வீரர்கள், ரப்பர் படகுகள் மூலமாக பாதுகாப்பான முறையில் மீட்டு வருகின்றனர். மேலும், அந்தப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில், வெள்ள நீரில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளர்களையும் ரப்பர் படகு மூலமாக கயிறு கட்டி இழுத்து மீட்டு வருகின்றனர்.
இதனையடுத்து, அப்பகுதியில் இருந்த மீட்கப்பட்ட மக்கள், பாதுகாப்பான முறையில் அருகே உள்ள அரசுப் பள்ளி, தனியார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுக்கு அப்பகுதி நகர் மன்றத் தலைவர் மூர்த்தி அத்தியாவசியப் பொருட்களான பால், பிரட், போர்வை, பாய் உள்ளிட்டவைகளை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், இடுப்பளவு தேங்கியுள்ள நீரில், வட மாநிலத் தொழிலாளர்கள் சபரிமலைக்கு இருமுடி கட்டி செல்வது போன்று, தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு தண்ணீரில் மிதந்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பொதுமக்களை மீட்கும் பணியானது தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதேபோல், மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் சீனிவாசன் நகர் பகுதியில் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து சென்றுள்ளது. மேலும், புயல் காரணமாக அப்பகுதியில் உள்ள மின்கம்பங்கள் முழுவதும் சாலையின் ஓரம் சாய்ந்துள்ளது. இதனால், அப்பகுதியில் மூன்று நாட்களாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், மழை நீர் சூழ்ந்துள்ளதால், அத்தியாவசியப் பொருட்களை வாங்கச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மூன்று நாட்களாக வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இப்பகுதியை ஆய்வு செய்து, மழை நீரை அகற்றி, மின்கம்பங்களை சீர் செய்து மின் விநியோகம் செய்ய வழி செய்யுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:"புயலால் பாதித்த மக்களுக்கு உதவி செய்யுங்கள்" விஜய் மக்கள் இயக்கத்திற்கு நடிகர் விஜய் போட்ட உத்தரவு..!