சென்னையில் தனியார் குடியிருப்பில் தீ விபத்து; தூரிதமாக செயல்பட்ட தீயணைப்புத்துறை சென்னை: திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையம் பின்புறம் மூன்று தளங்கள் கொண்ட தனியார் குடியிருப்பில் 12 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.நேற்று மாலை 3 மணியளவில் குடியிருப்பின் கீழ் தளத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் மீட்டரில் திடீரென கரும்புகை கிளம்பியதால், குடியிருப்பு வாசிகள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.
பின்னர் மின் மீட்டர் மளமளவென தீப்பிடித்து எரிந்ததால் உடனடியாக அண்ணா நகர் தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் எரிந்து கொண்டிருந்த தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த போது, முதல் தளத்தில் சிக்கி கொண்டிருந்த மூதாட்டி உட்பட இரு பெண்களும் பயத்தில் கூச்சலிட்டுள்ளனர்.
உடனடியாக முதல் தளத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் இருவரையும் பத்திரமாக மீட்டனர். சுமார் 30 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் மின் மீட்டர் அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்களால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், மின்மீட்டரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: தமிழ்நாடு சுகாதாரத்துறை சென்னை ஐஐடியுடன் இணைந்து ஆராய்ச்சி - அமைச்சர் மா.சு