சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகில் காமாக்ஷி மேலிபேக் பிரைவேட் லிமிடெட் என்னும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அதில் பல்வேறு பிளாஸ்டிக், பாலித்தீன் உள்ளிட்ட பேக்கிங் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் இரவு நேரத்தில் தொழிற்சாலையில் ஊழியர்கள் பணி செய்து கொண்டிருந்த போது, திடீர் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தொழிற்சாலையில் பாலித்தீன் பொருள்கள் வைத்து ரோல் டைப் டன் கணக்கில் உற்பத்தி செய்து ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டு இருந்த கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தீ அருகில் கெமிக்கல் வைக்கபட்டு இருந்த பகுதிக்கு பரவியதால், மளமளவென எரிய துவங்கியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அம்பத்தூர் தொழிற்பேட்டை, செங்குன்றம், தண்டையார்பேட்டை, ஜே.ஜே நகர், ஆவடி, மாதவரம், வில்லிவாக்கம், எழும்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, கட்டுக்கடங்காமல் பரவிய தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
மேலும் கெமிக்கல் பேரல்கள் வைக்கப்பட்ட கிடங்கில் அனைத்தும் வெடித்துச் சிதறியதால் அருகில் சென்று தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு துறையினர் திணறினர். தொடர்ந்து சென்னையில் இருந்து ரோபோ ஸ்கைப் லிப்ட் என்ற அதிநவீன இயந்திரங்களுடன் கூடிய வாகனம் வரவழைக்கப்பட்டு விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையில் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணி முடுக்கி விடப்பட்டது.