சென்னை, தியாகராய நகர், பாண்டி பஜாரில் உள்ள சிந்தாமணி கூட்டுறவு பெட்ரோல் விற்பனை நிலையத்தில், பழுதான பழைய பெட்ரோல் சேமிப்பு டேங்கை மாற்றும் பணி கடந்த நான்கு நாள்களாக நடைபெற்று வந்தது.
இறுதிகட்டப் பணிகள் நடந்துவந்த நிலையில், இன்று (செப்.14) சேமிப்பு டேங்கில் குழாய்களை வெல்டிங் செய்யும்போது தீப்பொறி ஏற்பட்டதில் திடீரென தீப்பற்றியது.
டேங்கில் ஏற்கனவே பெட்ரோல் எஞ்சியிருந்த நிலையில், தீ மளமளவெனப் பற்றியதால், டேங்கை மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்த குமார், சேகர் ஆகிய இரு ஊழியர்களும் பலத்த காயமடைந்தனர்.
இதையடுத்து உடனடியாக தி.நகரில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இரண்டு மீட்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், உலர் ரசாயனப் பொடியைத் தூவி தீயை அணைத்தனர். இதனையடுத்து அங்கு ஏற்படவிருந்த பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
கூட்டுறவு பெட்ரோல் நிலையத்தில் தீ விபத்து தொடர்ந்து காயமடைந்த இரு ஊழியர்கள் உடனடியாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் நெருக்கம் மிகுந்த பாண்டி பஜாரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து குறித்து, பாண்டி பஜார் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க:திரையரங்குகள் திறக்கும்போது சின்ன படங்களை வெளியிட தைரியம் இருக்கிறதா? - பாரதிராஜா