சென்னை:ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் இரண்டாம் டவர் கட்டிடத்திற்குப் பின்புறமாக உள்ள கல்லீரல் பிரிவு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 10 மணி அளவில் மூன்று தளங்கள் கொண்ட அந்தக் கட்டடத்தின் தரைத்தளத்தில் உள்ள ஸ்டோர் ரூமில் திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.
அந்த அறையில் பெரும்பாலான சர்ஜிகல் பொருள்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர் மற்றும் கெமிக்கல் பிளாஸ்டிக்குகள் உள்ளிட்டவை இருந்த காரணத்தினால் கரும்புகையானது அதிக அளவில் வெளியேற ஆரம்பித்தது. மேலும், நூற்றுக்கணக்கான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் அந்த அறையில் இருந்துள்ளன.
மேலும் மருத்துவ கெமிக்கல் கலந்த ஸ்டோர் ரூமில் இருந்த காரணத்தினால் தீ விபத்து காரணமாக அந்த பொருள்களும் அதே நேரத்தில் சில சிலிண்டர்களும் வெடித்துள்ளது. தொடர்ந்து தீயை அணைப்பதற்கு 10 தீயணைப்பு வாகனங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் களம் இறங்கி தீயை அணைத்தனர்.
தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சி தீயை அணைக்க முற்பட்ட போதும் கரும்புகையானது ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை முழுவதும் பரவியது. தீ தொடர்ந்து மற்ற தளங்களுக்குப் பரவாமல் தீயணைப்புத் துறையின ரால் தடுக்கப்பட்டாலும், புகை காரணமாக அருகில் உள்ள கட்டடங்களிலும் பரவியது.
தீ விபத்து நடந்த கட்டடத்தைப் பொருத்த வரையில் நியூரோ பிரிவில் உள்ள ஐசியூ பகுதிகளில் சிகிச்சை பெற்றுவந்த முப்பத்தி மூன்று நோயாளிகள் , மற்றும், கட்டடத்தின் பின்புறம் உள்ள புற்று நோய் பிரிவு நோயாளிகள் மாடியில் பாதுகாப்பாக தஞ்சம் அடைந்ததால் அவர்களை ஏணிகளை கொண்டு பத்திரமாக காவல்துறையினரும், ஊழியர்களும் இணைந்து ஒவ்வொருவராக கீழே இறக்கி மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், விபத்து குறித்து அறிந்தவுடன் மருத்துவர்கள் மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள் அனைவரும் களமிறங்கி கட்டடத்தில் உள்ள நோயாளிகளை பத்திரமாக வெளியேற்றினர். தொடர்ந்து கரும்புகை வெளிவந்த வண்ணம் இருந்த நிலையில் 10 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் குழு தைரியமாக சுவரை துளையிட்டு உள்ளே நுழைந்து அனைத்து அறைகளிலும் சோதனை செய்து யாரேனும் சிக்கி உள்ளார்களா என சோதனை செய்தனர் .
மேலும் மருத்துவப் பணியாளர்களும், கட்டடத்தில் உள்ள ஒவ்வொரு அறையிலும் யாரேனும் சிக்கி உள்ளார்களா என ஆய்வு செய்தனர். சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் ஆணையர் அன்பு, துணை ஆணையர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினரும், கட்டடத்தை சுற்றி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தொடர்ந்து நோயாளிகளை மீட்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்நிலையில் தீ விபத்தின்போது மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த 4 மருத்துவர்கள் மற்றும் 3 செவிலியர்கள் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தீ விபத்து நடந்த இடத்தில் தீயணைப்புத் துறை இயக்குனர் பி.கே ரவி மற்றும் இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் உள்ளிட்ட உயர் அலுவலர்களும் களத்தில் இறங்கி தீயை அணைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
ராட்சத ஏணிகள், ஸ்கை லிப்ஃட் (sky lift) இயந்திரங்களைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான வீரர்கள் களத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், தீயணைத்த பிறகே முழுமை விவரங்கள் தெரிய வரும் என தீயணைப்புத்துறை இயக்குனர் பிகே ரவி தெரிவித்தார். தீயணைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே 4 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பலமான சத்தத்துடன் வெடித்தன. இதனையடுத்து கட்டிடத்தில் உள்ள நூற்றுக்கணக்கான ஆக்சிஜன் சிலிண்டர்கள் தீயணைப்புத் துறையில் முழு முயற்சி காரணமாக வெளியே எடுக்கப்பட்டது.