சென்னை:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராணுவ வீரருக்கும், திமுக கவுன்சிலருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ராணுவ வீரர் பிரபு, கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். எனவே, இந்த சம்பவத்தை கண்டித்து, சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு பாஜக சார்பில் நேற்று (பிப்.21) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய பாஜக நிர்வாகியும், ஓய்வுபெற்ற ராணுவ வீரருமான கர்னல் பாண்டியன், ராணுவ வீரர்களை சீண்டினால் தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாடு அரசுக்கும் நல்லது அல்ல என்றும், ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாடு அரசு பரீட்சை வைத்து பார்க்க வேண்டாம் எனவும் எச்சரித்தார். தொடர்ந்து பேசிய அவர், எங்களைச் (ராணுவ வீரர்களை) சீண்டினால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிடும் என பகிரங்கமாக கூறினார்.