சென்னை:திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில், உள்ளாட்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி தனது சகோதரர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், பினாமிகளின் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்களை சட்டவிரோதமாக வழங்கியதாக குற்றம்சாட்டியிருந்தார்.
ரூ.942 கோடி அளவுக்கு உபரி வருவாயைக் கொண்டிருந்த, சென்னை மாநகராட்சி எஸ்.பி.வேலுமணியின் தவறான நிர்வாகத்தால் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார்.
அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் தொடர்ந்த வழக்கில், 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதியன்று சிபிஐ மற்றும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்ததில், 2014 ஜூன் முதல் 2015 நவம்பர் வரை கோவை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் சுற்று சுவர் அமைத்தல், குடிநீர் குழாய் பதித்தல் போன்றவைகளுக்காக KCP இன்ஜினியர்ஸ், SP பில்டர்ஸ் நிறுவனங்களுக்கே டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
டெண்டர் நடைமுறைகளில் தலையிடவில்லை
இந்த வழக்குகளில் வேலுமணி தாக்கல் செய்த பதில் மனுவில், அமைச்சர் என்ற முறையில் கொள்கை முடிவுகளை மட்டுமே எடுத்ததாகவும், மாநகராட்சி டெண்டர் நடைமுறைகளில் தலையிடவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
தான் எம்.எல்.ஏ.-வாகும் முன்பே, தன் சகோதரர்களின் நிறுவனங்கள், கோவை மாநகராட்சியின் ஒப்பந்ததாரராக இருந்துள்ளதாக விளக்கம் அளித்திருந்தார்.
டெண்டரில் எந்த வகையிலும் தொடர்பில்லாதவர்கள், தன்னுடைய அரசியல் விரோதிகள், டெண்டர் கிடைக்காதவர்கள் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளதாகவும் தனது பெயரையும் தான் சார்ந்துள்ள கட்சியின் பெயரையும் களங்கப்படுத்த வேண்டுமென்ற, ஒரே நோக்கில் வழக்குத் தொடர்ந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.