தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவிட்-19 நோயாளிகளின் ஆக்ஸிஜன் அளவைக் கண்டறிய  பல்ஸ் ஆக்ஸிமீட்டர்! - கரோனா நோய் தொற்று

கரோனா நோய்த் தொற்று பாதித்த நோயாளிகளின் ஆக்ஸிஜன் அளவைக் கண்டறியும் பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவி அதிகளவில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

finger pulse oximeter purchased for covid-19 patients said minister vijaya baskar
finger pulse oximeter purchased for covid-19 patients said minister vijaya baskar

By

Published : Jul 12, 2020, 1:03 PM IST

மாநில சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் அரசு கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை குணப்படுத்துவதற்குத் தேவையான மருந்தோ அல்லது தடுப்பூசியோ இல்லாத இன்றைய சூழலில், பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

கரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு, குறைவான அறிகுறிகளுடன் உள்ள நோயாளிகள் கோவிட் பராமரிப்பு மையங்களிலும், மிதமான அறிகுறிகளுடன் கூடிய நோயாளிகள் கோவிட் நல மையங்களிலும், தீவிரத் தொற்று அறிகுறிகளுடன் உள்ள நபர்கள் கோவிட் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ள நோயாளிகளின் ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் குறையும் பொழுது மூச்சுத் திணறல் ஏற்பட்டு, நோயாளிகள் உயிரிழக்கும் வாய்ப்புள்ளது. எனவே, ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவை வெகு எளிதாக அளவிட ஏதுவாக "ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்" என்ற கருவியை அதிக அளவில் பயன்பாட்டிற்குக் கொண்டுவர உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழகத்தின் மூலமாக 43 ஆயிரம் ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்கள் கருவிகளை கொள்முதல் செய்ய ஆணை வெளியிடப்பட்டு, இதுவரை 23 ஆயிரம் கருவிகள் தருவிக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள கருவிகள் ஓரிரு நாள்களில் பெறப்படும். தேவையின் அடிப்படையில் இக்கருவிகள் கூடுதலாக கொள்முதல் செய்யப்படும். இக்கருவி, அறிகுறிகள் இல்லாமல் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று, ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவினைக் கண்காணிக்க உதவும்.

மேலும் காய்ச்சல் சிகிச்சை மையங்கள், கோவிட் பராமரிப்பு மையங்கள், கோவிட் நல மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவினைக் கண்காணிக்கவும் அதிக அளவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது' எனக் கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details