சென்னை: பொது இடங்களில் கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறுபவர்களிடம் அபராதம் வசூல் செய்வதற்கான தகுதி பெற்ற அலுவலர்களை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை தலைமை இயக்குநர், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குநர் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழ்நாடு பொது சுகாதாரத் சட்டம் 1939-இல் திருத்தம் செய்யப்பட்டு கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டம் 2020-இன்படி கரோனா வைரஸ் (தீநுண்மி) முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறுபவர்களிடம் அபராதம் வசூல் செய்வதற்கு அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939 படி, தனிமைப்படுத்துவதற்கான விதிகளை மீறுதல், முகக்கவசம் சரியாக அணியாமல் இருத்தல், பொது இடங்களில் எச்சில் துப்புதல், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருத்தல் போன்றவை விதிகளை மீறிய குற்றச் செயலாகும். இதற்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இணை இயக்குநர் மாநில அளவில் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலராக இருந்து அபராதம் விதிப்பதை செயல்படுத்துவார். மாவட்ட அளவில் சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் கண்காணிப்பு அலுவலராக இருந்து விதிகளை மீறுபவர்களை கண்காணிப்பார்கள். விதிகளை மீறுபவர்களிடம் அபராதத்தை கீழ்கண்ட நிலையில் உள்ள அலுவலர்கள் வசூல் செய்வார்கள்.
கிராமப்புறங்களில் சுகாதார ஆய்வாளர் மற்றும் அவருக்கு மேல் அதிகாரம் பெற்ற சுகாதார பணியாளர்கள் அபராதம் வசூல் செய்வார்கள்.
நகராட்சிகள் மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சானிட்டரி இன்ஸ்பெக்டர் நிலைக்கு மேல் உள்ளவர்கள் அபராதம் வசூல் செய்யலாம்.