சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வுக்கூடத்தில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் Paytm QR Code மூலம் ஸ்கேன் செய்து, அபராதம் செலுத்தும் முறையை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்ததுடன், போக்குவரத்து காவல் துறையினருக்கு சிறிய அளவிலான QR Code அட்டைகளையும் வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச்சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால், “2018ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட E-Challan முறையில் அபராதப்பணம் வசூலிப்பதில் பல்வேறு காரணங்களால் சுணக்கம் ஏற்பட்டது. எனினும், போக்குவரத்து அழைப்பு மையங்கள் மூலம் விதிமீறலில் ஈடுபடுவோர்களை அணுகி அபராதத்தொகை வசூலிக்கப்பட்டு வரப்பட்டது.
E-Challanமுறையில் 21 விழுக்காடு மட்டுமே அபராதத்தொகை வசூல் செய்யப்பட்டது. போக்குவரத்து அழைப்பு மையங்கள் தொடங்கப்பட்டபின் அபராத வசூல் 47 விழுக்காடாக உயர்ந்துள்ளது. எனினும், இன்னும் 50 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் விதிமீறலில் ஈடுபட்டு அபராதம் செலுத்தாமல் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் அபராத வசூலை மேம்படுத்த தற்போது Paytm உடன் இணைந்து சென்னை போக்குவரத்து காவல் துறை QR Code மூலம் சம்பவ இடத்திலேயே அபராதத்தொகையை வசூல் செய்யும் முறையை இன்று (ஆக.04) அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.
E-Challan முறையில் அபராதம் வசூலிக்கும்போது முறைகேடு செய்ததாக பெறப்பட்ட இரு புகார்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் உள்ள போக்குவரத்து காவல் துறையினருக்கு 300 QR Code அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.