சென்னை:அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே கல்வி இணைச் செயல்பாடுகளை ஊக்குவிக்குவிப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அவற்றின் படி நுண்கலைகளில் மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்க ஒவ்வொரு வாரத்திலும் இரு பாடவேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பள்ளிக்கு அருகில் உள்ள நடன, நாடக, இசைக் கலைஞர்களை பள்ளிக்கு வரவழைத்து அவர்கள் மூலமாக, மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. பள்ளி அளவில் கலை விழாக்கள் நடத்தப்பட்டு அதில் சிறந்து விளங்கும் மாணவர்கள் வட்டார அளவிலான கலைத் திருவிழாக்களுக்கு அனுப்பப்பட உள்ளனர். அதில் வெற்றிப் பெற்றவர்கள் , மாவட்ட அளவிலான கலை விழாக்களில் கலந்துக் கொள்ள அனுமதிக்கப்படுவர்.
மாவட்ட போட்டியில் வெற்றிப் பெற்றவர்கள் ஆண்டு இறுதியில் மாநில அளவில் நடக்கும் கலைத் திருவிழாவிலும் பங்குகொள்வார். இதில் சிறார் அரங்கம், நடனம், பொம்மலாட்டம், நாட்டுப்புறக் கலைவடிவங்கள் அரசுப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. சமூக விழிப்புணர்வைத் தரும் பாடல்கள் தமிழிசை வடிவத்தில் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும்.