ராமநாதபுரம் கமுதி பம்மனேந்தல் ஊராட்சியில் பிறந்தவர், அன்புச்செழியன். தலைமை ஆசிரியராகப்பணியாற்றிய நீலமேகத்தின் மகனாக 1964ஆம் ஆண்டு பிறந்தார். 1990-க்கு முன்பே அன்புச்செழியன் குடும்பத்தோடு மதுரை கீரைத்துரை பகுதிக்கு குடிபெயர்ந்தார். தந்தை ஓய்வு பெற்றதும் கிடைத்த பணத்தை வைத்து தெருவோர வியாபாரிகளுக்கும், சிறு சாலையோரக் கடைகளுக்கும் வட்டி விகிதத்தில் கடன் கொடுத்து வாங்கும் பைனான்ஸ் தொழில் செய்யத்தொடங்கினார்.
இதன்பிறகு ராமநாதபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்களுக்கு சிறிய அளவில் பைனான்ஸ்விடும் தொழிலில் ஈடுபட்டார். இதையடுத்து மதுரையில் மார்க்கெட், திரைப்படத்தயாரிப்பாளர்களுக்கு என்று பெரிய அளவில் பைனான்ஸ் செய்யத்தொடங்கினார், அன்புசெழியன். குறிப்பாக, கந்துவட்டியில் ஸ்பீடு வட்டி, மீட்டர் வட்டி என்ற முறையில் முதல்முதலாக பணம் வசூலில் ஈடுபட்டது அன்புச்செழியன் தான் எனக் குற்றச்சாட்டு அவர்மேல் உள்ளது.
இதனையடுத்து தனது தொழிலை விரிவுபடுத்திக்கொண்டு சென்னைக்கு வந்த அன்புச்செழியன் திரைப்படங்களுக்கு பைனான்ஸ் செய்ய ஆரம்பித்துள்ளார். தமிழ் சினிமாவில் குறைந்த விழுக்காட்டுக்கு வட்டிக்கு கொடுப்பதால் அன்புச்செழியனை நோக்கி தயாரிப்பாளர்கள் சென்றதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. விஜயகாந்த் நடித்த "வானத்தைப்போல" படத்திற்கு முதன்முதலில் அன்புச்செழியன் பைனான்ஸ் செய்தார். அதன்பின் பல்வேறு படங்களுக்கு கேட்டவுடன் உடனே பணம் வழங்கி அன்புச்செழியனின் தொழில் தமிழ் சினிமாவில் செழிப்பானது.
ஆனால், பணத்தை சொன்ன தேதியில் தராமல் ஏமாற்றினால் அன்புச்செழியன் கையாளும் விதமே வேறு என சினிமா துறையினர் தெரிவிக்கின்றனர். ஆட்களை அனுப்பி மிரட்டுவதும், நிலத்தை அபகரிப்பதும் போன்ற செயலில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. அக்னி நட்சத்திரம், தளபதி உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஜிவி என்ற ஜி.வெங்கடேஷ்வரன் (திரைப்பட இயக்குநர் மணிரத்னத்தின் சகோதரர்) கந்துவட்டி கொடுமையால் கடந்த 2003ஆம் ஆண்டு தற்கொலை செய்தபோது அன்புச்செழியனின் பெயர் அடிபட்டது.
ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதே போல "சுந்தரா டிராவல்ஸ்" படத்தை தயாரித்த தங்கராஜா என்பவர் அன்புச்செழியனிடம் 20 லட்சம் ரூபாய் பைனான்ஸ் பெற்று வட்டிக்கொடுக்க முடியாததால் அவரின் 1.5 கோடி ரூபாய் நிலத்தை அபகரித்த வழக்கில் 2011ஆம் ஆண்டு அன்புச்செழியன் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கந்து வட்டி, கேட்டு மிரட்டல் என்று வழக்குப்பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையில் இருந்து வெளியே வந்த பின்னரும் ஒரு செல்வாக்கும் குறையாமல் தனது பைனான்ஸ் தொழிலை திரை உலகில் விரிவுபடுத்தினார், அன்புச்செழியன். இந்த முறை பைனான்ஸ் தொழில் மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் களம் இறங்கினார். 'கோபுரம்' பிலிம்ஸ் என்ற பெயரில் விக்ரம் பிரபு நடித்த 'வெள்ளைக்காரத்துரை' என்ற படத்தை கடந்த 2014ஆம் ஆண்டு முதலில் தயாரித்து வெளியிட்டார். இதன்பிறகு 2015ஆம் ஆண்டு தனுஷ் நடித்த தங்கமகன், 2016ஆம் ஆண்டு விஷால் நடித்த மருது, 2017ஆம் ஆண்டு விஜய்சேதுபதி நடித்த 'ஆண்டவன் கட்டளை' ஆகியப் படங்களைத் தயாரித்து வெளியிட்டார்.
அதன் பிறகு பெரிதாக அவர் படங்களை தயாரிக்கவில்லை. ஆண்டிற்கு தமிழ் சினிமாவில் 100 படங்கள் வெளியானால் அதில் 90 படங்களில் அன்புச்செழியனின் பங்கு இருக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக தமிழ் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே கடந்த 2017ஆம் ஆண்டு திரைப்பட இயக்குநரும், நடிகருமான சசிகுமாரின் உறவினர் அசோக்கு மார் கந்துவட்டி கொடுமையால் திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அசோக் குமாரின் தற்கொலை கடிதம் அதிர்வலையை ஏற்படுத்தியது. பைனான்சியர் அன்புச்செழியனின் கந்துவட்டி கொடுமையால்தான் உறவினர் அசோக் குமார் தற்கொலை செய்துகொண்டதாக இயக்குநர் சசிகுமார் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அன்புச்செழியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், அதன் பிறகு காவல் துறை தரப்பில் பெரிய நடவடிக்கை எதுவுமில்லை.