தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

TN Budget 2023: பள்ளிக்கல்வி, உயர்கல்வித்துறை அறிவிப்புகள் விபரம்! - school education department

சட்டசபையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.40 ஆயிரம் கோடி, உயர்கல்வித்துறைக்கு ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்

Finance Minister Palanivel Thiagarajan said that the kalaignar library will start from June
கலைஞர் நூலகம் ஜூன் முதல் துவங்குகிறது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்

By

Published : Mar 20, 2023, 1:52 PM IST

சென்னை: தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவையின் மண்டபத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அப்போது பள்ளிக்கல்வித்துறை சார்ந்த திட்டங்கள் குறித்து அவர் அறிவித்த திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள் பின்வருமாறு:

அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், புதிய கட்டடங்கள் கட்டிடவும் 7,000 கோடி ரூபாய் செலவில், ‘பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தை’ அரசு தொடங்கியுள்ளது. நடப்பாண்டில், 2,000 கோடி ரூபாய் செலவில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வரும் நிதியாண்டில், புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் என மொத்தம் 1,500 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

1 முதல் 3 ஆம் வகுப்பு வரை செயல்படுத்தப்பட்டுள்ள எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பின் அடிப்படையில், வரும் நிதியாண்டில் 110 கோடி ரூபாய் செலவில் நான்காம், ஐந்தாம் வகுப்புகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். தலைநகர் சென்னை மட்டுமன்றி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழாக்களும் ஐந்து இலக்கியத் திருவிழாக்களும் வெற்றிகரமாக, இவ்வாண்டு நடத்தப்பட்டன. மகத்தான இம்முயற்சியை வரும் ஆண்டில் 10 கோடி ரூபாய் நிதியுடன் தொடர உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

முதல் சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சியினை 24 நாடுகளின் பங்கேற்புடன் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அரசு வெற்றிகரமாக நடத்தியது. இந்த சர்வதேச புத்தகக் கண்காட்சி வரும் ஆண்டிலும் நடத்தப்படும். முதலமைச்சர் தலைமையில் 19-08-2021 மற்றும் 12-04-2022 ஆகிய நாட்களில் நடைபெற்ற மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டங்களில் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறை மூலம் நடத்தவும், பராமரிக்கவும், கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இதனைக் கருத்தில் கொண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டு வரப்படும்.இப்பள்ளிகளில் தற்போது பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் அனைத்து பணிப் பயன்களும் பாதுகாக்கப்படும் என்றார்.

மேலும், பல்வேறு அரசுத் துறைகள் மூலம் வழங்கப்படும் கல்வி உதவித்தொகையில் உள்ள தேவையற்ற தாமதங்களைக் குறைக்கவும், தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உரிய நேரத்தில் நேரடிப் பணப்பரிமாற்ற முறையில், அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் ஒருங்கிணைந்த கல்வி உதவித்தொகை இணையதளம் ஒன்று உருவாக்கப்படும்.

மதுரையில் இரண்டு இலட்சம் சதுர அடி பரப்பளவில் எட்டு தளங்களுடன் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டும் வரும் கலைஞர் நூலகத்தில் முதற்கட்டமாக, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இலக்கியம், பண்பாடு, அறிவியல், பொறியியல், சட்டம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 3 இலட்சத்து 50 ஆயிரம் நூல்கள் இடம்பெறும். இந்த நூலகம் ஜூன் மாதம் முதல் துவங்கும் என அறிவித்தார். பள்ளிக்கல்வித்துறை திட்டங்களுக்காக 2023 - 2024 நிதி ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் 40,299 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

உயர்கல்வியும் திறன்மேம்பாடும்

மாறி வரும் தொழில் சூழலுக்கு தேவைப்படும் மனிதவளத்தை உருவாக்குவதற்கு, 2,877 கோடி ரூபாய் செலவில், 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தலைசிறந்த திறன் மையங்களாக மாற்றும் திட்டம் நடைபெற்று வருகிறது. வரும் கல்வி ஆண்டிலேயே, இப்பணிகள் முடிக்கப்பட்டு, புதிய பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

இதன் அடுத்த கட்டமாக, தொழில்துறையினருடன் இணைந்து அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளை ‘திறன்மிகு மையங்களாக’ மாற்றும் திட்டத்தை வரும் ஆண்டில் அரசு தொடங்கும். இத்திட்டத்தில், 54 அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் 2,783 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘திறன்மிகு மையங்களாக’ தரம் உயர்த்தப்படும்.

தொழிற் பயிற்சி நிறுவனங்களிலும் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த திறன் பயிற்சியை வழங்குதல், திறமையான பணியாளர்களை உருவாக்குதல் போன்ற நோக்கங்களுடன், 120 கோடி ரூபாய் செலவில் சென்னை அம்பத்தூரில் 'தமிழ்நாடு உலகளாவிய புதுமை முயற்சிகள் மற்றும் திறன் பயிற்சி மையம்' (TN-WISH) அமைக்கப்படும்.

இந்த மையத்தில், இயந்திர மின்னணுவியல் (Mechatronics), இணைய வழிச் செயல்பாடு (Internet of things), அதிநவீன வாகனத் தொழில்நுட்பம் (Advanced Automobile Technology), துல்லியப் பொறியியல் (Precision Engineering) மற்றும் உயர்தர வெல்டிங் (Advanced Welding) போன்ற தொழில்நுட்பங்களுக்கான பயிற்சிகள் அளிக்கப்படும்.

நான் முதல்வன் திட்டத்தில் மொத்தமாக சுமார் 12.7 இலட்சம் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். 12,582 பொறியியல் ஆசிரியர்களுக்கும், 7,797 கலை மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கு வரவு-செலவுத் திட்டத்தில் 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திறன் பயிற்சி கட்டமைப்பை அதிகரிக்க, தற்போதுள்ள தொழிற்சாலைகள் தொழிற்பயிற்சிக் கூடங்களாகப் பயன்படுத்தப்படும். இளைஞர்களுக்கு தொழிற்சாலைகளிலேயே பயிற்சி அளித்திட தொழில் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும். தொழிற்சாலைகளில் திறன் பள்ளிகள் (Factory Skill Schools) என்ற இத்திட்டத்திற்கு இந்த ஆண்டில், 25 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மூன்றாவது பெரும் தொழில் தொகுப்பாக உருவெடுத்து வரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி சிப்காட் தொழில் பூங்காவில் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன திறன் மேம்பாட்டு மையம் நிறுவப்படும்.

பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் அரசு கல்லூரிகளில் கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் 1,000 கோடி ரூபாய் செலவில் ஐந்தாண்டுகளில் மேம்படுத்தப்படவுள்ளன. நடப்பாண்டில் 26 பல்தொழில்நுட்பக் கல்லூரிகள், 55 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிய வகுப்பறைகள், கூடுதல் ஆய்வகங்கள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பணிகள் வரும் நிதியாண்டிலும் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

கடந்த சில ஆண்டுகளாக ஒன்றிய குடிமைப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தப் போக்கை மாற்றியமைக்க, குடிமைப் பணிகள் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு மேம்பட்டப் பயிற்சி மற்றும் பயிற்சிப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை அண்ணா நிருவாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் செயல்படுத்தும்.

ஒவ்வோராண்டும் மதிப்பீட்டுத் தேர்வு மூலம் 1,000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் முதல்நிலை தேர்விற்குத் தயாராகுவதற்காக மாதத்திற்கு 7,500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இந்த திட்டத்திற்காக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கு 2023-24 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக, உயர்கல்வித் துறைக்கு 6,967 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: TN Budget 2023 : தமிழ் வளர்ச்சி, பண்பாட்டு துறைக்கான சிறப்பு அறிவிப்புகள்!

ABOUT THE AUTHOR

...view details