தமிழ்நாட்டில் கரோனா ஊரடங்கு பிறகு பல்வேறு தளர்வுகளுடன் சுமார் எட்டு மாதங்களுக்கு பிறகு இன்று கல்லூரிகள், விடுதிகள் திறக்கப்பட்டன. இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் செயல்பட தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இளங்கலை, முதுகலை இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் ஆகியோர் மட்டும் கல்லூரிக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கல்லூரிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்தது. அதன்படி,
- கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் விருப்பமுள்ள மாணவர்கள் கல்லூரிகளுக்கு வரலாம் மற்றவர்கள் வீட்டிலிருந்தே ஆன்லைனில் கற்றல் பணிகளை தொடரலாம்.
- மாணவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் ஒரு சமயத்தில் 50 விழுக்காடு மாணவர்களை மட்டுமே கல்லூரிகள் அனுமதிக்க வேண்டும். இதனைப் பின்பற்றும் வகையில் சுழற்சி முறை வகுப்புகளை நடத்தலாம்.
- மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும்.
- கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்களின் உடல் வெப்பநிலையை கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும்.
- கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் மாணவர்களுக்கு நேரடியாக தொடர்பு இருந்தால் அவர்களைத் தனிமைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை விடுதிகளில் செய்ய வேண்டும்.
- கல்லூரி விடுதியில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்கியிருக்க வேண்டும்.