குடியரசு தின விழா முதற்கட்ட ஒத்திகை நிகழ்ச்சி கடந்த திங்கள்கிழமையும், இரண்டாம் கட்ட ஒத்திகை நேற்று காலையும், இறுதி கட்ட ஒத்திகை இன்று காலையும் சென்னை மெரினா கடற்கரை சாலையில் நடைபெற்றது. ஒத்திகை நிகழ்ச்சியை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உள்ள காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
இந்த ஒத்திகை நிகழ்ச்சியில், முதலில் தமிழ்நாடு காவல் துறையினர் இருசக்கர வாகனத்தில் அணிவகுத்து வர, அணிவகுப்புக்கு நடுவே தமிழ்நாடு முதலமைச்சரின் ஒத்திகை வாகனம் கிரீன்வேஸ் சாலை முகாம் இல்லத்தில் இருந்து நிகழ்விடத்திற்கு வந்தடைந்தது.
இதனையடுத்து, நாட்டுப்பண் இசைக்க இந்திய விமானப்படை அதிகாரிகள் மூவர்ண தேசியக்கொடியை ஏற்றினார்கள். தேசியக் கொடி கம்பத்தின் உச்சியின் மீது செல்ல இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மரியாதை செலுத்தும் விதமாக அணிவகுத்துச் சென்றது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு காவல்துறை, விமானப்படை, குதிரைப்படை, தேசிய மாணவர் படை, அதிவிரைவுப்படை துறையினர் அணிவகுத்துச் சென்றனர்.