சென்னை:முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த செல்போன் கடை வைத்து நடத்தி வரும் ஜமால் என்பவரது வீடு மற்றும் கடைகளில் கடந்த 13 ஆம் தேதி என்.ஐ.ஏ அதிகாரிகள் போல நாடகமாடி ஒரு கும்பல் சுமார் 2.30 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது. இச்சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய பா.ஜ.க முன்னாள் நிர்வாகியான வேலு (எ) வேங்கை அமரன், புஷ்பராஜ், வீரா (எ) விஜயகுமார், கார்த்திக், தேவராஜ் மற்றும் ரவி ஆகியோர் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்து பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்களை 6 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் வழக்கில் தொடர்புடைய முகமது ஃபாசில் என்ற உடற்பயிற்சியாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்ததுடன் அவரது வீட்டில் இருந்து சுமார் 1.65 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
அதன் தொடர்ச்சியாகத் திட்டத்திற்கு மூளையாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு போலீசாரின் நடவடிக்கைகள் குறித்து துப்பு கொடுத்து வந்த நபரான சித்திக் மற்றும் அவரது சகோதரர் அலி ஆகியோர் போலீசாரிடம் பிடிபட்டனர். புகார்தாரரான ஜமாலிடம் வேலை பார்த்து வந்த சித்திக் ஜமாலிடம் அதிக பணப்புழக்கம் உள்ளதை அறிந்து தனது சகோதரர் அலி மற்றும் பிற குற்றவாளிகளுடன் சேர்ந்து திட்டம் தீட்டி கொள்ளையில் ஈடுபட்டது அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் திருநெல்வேலியைச் சேர்ந்த கந்தவேல் ராஜா என்பவர்தான் கொள்ளையடிக்க ஆள் சேர்த்த நபர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரின் தற்போதைய இருப்பிடம் தெரியாத நிலையில் திருநெல்வேலியில் உள்ள கந்தவேல் ராஜாவின் சகோதரரை பிடித்த போலீசார் அவர் மூலம் செல்போனில் தொடர்புகொண்டு சென்னையில் பதுங்கியிருந்த கந்தவேல் ராஜாவை நேற்றிரவு கைது செய்தனர்.