சென்னை: லியோ திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டத்தை நவம்பர் 1ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கொண்டாட அனுமதி கோரி தயாரிப்பு நிறுவனம் தரப்பில் காவல் துறையினரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 19ஆம் தேதி, உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் லியோ திரைப்படம் வெளியாகி விஜய் ரசிகர்கள் மற்றும் பொது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
மாஸ்டர் படத்திற்குப் பிறகு லோகேஷ் - விஜய் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் அதுவே படத்திற்கு தனி ஹைப்பை உருவாக்கியது. இந்த படம் அறிவிக்கப்பட்டதில் இருந்து ரிலீஸ் வரை ஏராளமான சர்ச்சைகளை சந்தித்தது. கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான history of violence என்கிற ஆங்கில படத்தின் தழுவலான லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய், பார்த்திபன் என்கிற கதாபாத்திரத்தில் பேக்கரி தொழில் செய்பவராக நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்திற்கு லோகேஷ் உடன் இணைந்து ரத்னகுமார், தீரஜ் வைத்தி ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. லியோ திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்து வருகிறது. ரசிகர்கள் இடையில் கலவையான விமர்சனங்களை லியோ திரைப்படம் பெற்று வந்தாலும் படத்தின் வசூல் நாளாக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்து வருகிறது.