சென்னை:ரைட் ஐ தியேட்டர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் V.Z.துரை தயாரிப்பில், மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 23-ஆம் தேதி வெளியானது. இதில், சுந்தர் சி, பாலக் லால்வாணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 350 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வினில் பேசிய இயக்குநர் சுந்தர் சி, "வழக்கமாக இந்த மாதிரி விழாக்களில் தான் நன்றி சொல்ல வேண்டும், ஆனால் இம்மாதிரி விழாக்களே நடப்பது அரிதாகிவிட்டது. அதனால் இசை விழாவிலேயே எல்லோருக்கும் நன்றி சொல்லிவிடுகிறோம். இந்தப்படத்தை 350-க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியிடப்போவதாக துரை கூறிய போது நான் பயந்துவிட்டேன்.
ஏனெனில், இப்போதெல்லாம் ரிலீஸாகும் நாளிலேயே தியேட்டரில் கூட்டமில்லாமல் ஷோ கேன்சலாகும் காலகட்டத்தில் இருக்கிறோம். பெரிய ஹீரோக்கள் படங்களுக்குத் தான் 300 தியேட்டர் போடுகிறார்கள். அதனால் தான் பயந்தேன். ஆனால் எல்லாவற்றையும் தாண்டி 'தலைநகரம் 2' திரையரங்குகளில் ஓடுவது மகிழ்ச்சியைத் தருகிறது. தலைநகரம் 2 ஒரு எமோஷனல் ஆக்சன் படம். ஒவ்வொரு ஆக்சனுக்குப் பின்னும் எமோஷன் இருக்கும். நான் நாலு பேரை அடிக்கிறேன் என்பதை நம்பும்படி எடுத்திருந்தார். தியேட்டரில் படத்தை பார்த்து விட்டு நிறையப் பேர் என்னைப் பாராட்டினார்கள்” என கூறினார். இந்தப்படத்தின் வெற்றிக்கு இந்தப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களே சாட்சி என கூறிய அவர் இப்படத்தை வெற்றி பெறச் செய்த மக்களுக்கும் பத்திரிக்கை நண்பர்களுக்கும் தன் நன்றியை தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய நடிகை ஆயிரா ”இது தனக்கு மிகவும் சந்தோஷமான தருணம் எனவும், தனக்கு இந்த வாய்ப்பை தந்த இயக்குநர் V.Z.துரைக்கு நன்றி கூறினார். தான் இந்த கதாப்பாத்திரத்தை செய்ய முடியுமா என பயந்ததாகவும், ஆனால் இயக்குநர் துரை ஊக்கம் தந்து செய்ய வைத்ததாகவும் கூறினார். மேலும், தனக்கு சுந்தர் சி மிகவும் உறுதுணையாக இருந்ததாக கூறி இந்தப்படத்திற்கு மக்கள் தந்த ஆதரவிற்கு" நன்றி தெரிவித்தார்.