சென்னை:அமைந்தகரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற நிறுவனம், தமிழ்நாடு முழுவதும் 13 இடங்களில் கிளைகளை துவங்கி, தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் தோறும் 10% முதல் 30% வரை வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டது. இது தொடர்பாக, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது. புகார்களின் அடிப்படையில் கடந்த மே மாதம் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வழக்கு தொடர்பாக இதுவரை இடைத்தரகர்களாக செயல்பட்டு வந்த பாஸ்கர், மோகன்பாபு, பட்டாபிராம், பேச்சிமுத்துராஜ் (எ) ரஃபீக், ஐயப்பன் உட்பட 5 பேர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று செந்தில்குமார் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1கோடியே 98 லட்சம் பணமும், அவரது வீட்டிலிருந்து ரூ.7.95 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.