சென்னை:புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 2015ஆம் ஆண்டு முதல் பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டாளர் பதவிகள் காலியாக உள்ளதாகவும், தற்காலிக நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இந்த பதவிகளை நிரப்ப உத்தரவிட வேண்டும் எனவும் புதுச்சேரி பல்கலைக்கழகம் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், காலி பதவிகள் எப்போது நிரப்பப்படும் என்பது குறித்து பதில் அளிக்க பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று (அக்.6) மீண்டும் தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்வு கட்டுப்பாட்டாளர் பதவிக்கு 23 பேரும், பதிவாளர் பதவிக்கு 36 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், நேர்முக தேர்வு நடத்தி நியமனம் செய்ய மூன்று மாதம் அவகாசம் வழங்க வேண்டும் என பல்கலைக்கழகம் சார்பில் கோரப்பட்டது.