சென்னை: மத்திய - மாநில அரசு பட்டியலின மற்றும் பழங்குடியின பணியாளர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் கருப்பையா, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் பல்வேறு துறைகளில், பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான 10 ஆயிரத்து 402 அரசுப் பணியிடங்கள், பின்னடைவு காலிப் பணியிடங்களாக உள்ளன. இந்த பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப பல்வேறு விதிகளை வகுத்து, கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசு அரசாணையாக பிறப்பித்துள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 11 லட்சத்து 96 ஆயிரத்து 982 பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவர்கள் அரசு வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள நிலையில், குறைந்த எண்ணிக்கையிலான பின்னடைவு காலி பணியிடங்களை, சிறப்பு தேர்வு நடத்தி நிரப்ப நடவடிக்கை எடுக்காத தமிழக அரசின் தேர்வு முகமைகள், ஏராளமான தேர்வுகளை நடத்தி காலியிடங்களை நிரப்பி வருவதாக தெரிவித்துள்ளார்.