நரிக்குறவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வில் சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் உடனிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், “தமிழ்நாட்டில் தடுப்பூசிப் பணிகள் எல்லா நிலைகளிலும் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை ஐந்து கோடியே இரண்டு லட்சத்து 54 ஆயிரத்து 633 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 64 விழுக்காடு நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 22 விழுக்காடு நபர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 68 லட்சத்து 56 ஆயிரத்து 278 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் முதல் தவணை 83 விழுக்காட்டினரும், இரண்டாவது தவணை 40 விழுக்காட்டினரும் செலுத்திக் கொண்டுள்ளனர். சென்னை மாநகராட்சி தடுப்பூசி செலுத்தும் பணியில் முதல் இடத்தில் உள்ளது.
அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி என்ற முறையில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் கர்பிணிகளுக்கு அதிக அளவில் தடுப்பூசி செலுத்தப்படுள்ளது. நான்கு லட்சத்து 80 ஆயிரத்து 875 கர்ப்பிணி பெண்களுக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பாலூட்டும் தாய்மார்கள் மூன்று லட்சத்து 80 ஆயிரத்து 27 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுள்ளது.
இந்தியாவிலேயே மாற்றுத் திறனாளிகளுக்கென தமிழ்நாட்டில் தான் தனி முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சாலையோரத்தில் வசிப்பவர்கள் 1,761 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல் நரிக்குறவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் விதமாக சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டுள்ளது.
நாளை (அக்.10) ஐந்தாம் கட்டமாக தமிழ்நாட்டில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்களை அமைக்க மாவட்ட ஆட்சியரும், அந்தந்த மாவட்ட நிர்வாகமும் தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை நடத்தப்பட்ட முகாம்களில் நாளை நடைபெறும் முகாம்களில் தான் மக்கள் அதிகம் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் அதிகம் பலன்பெறுவர் என அமைச்சர் நம்பிக்கை அதேபோல் இதுவரை நடைபெற்ற தடுப்பூசி முகாமில் முதல் முகாமில் 28 லட்சத்து 93 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த சாதனையும் நாளை முறியடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்லா முகாம்களிலும் கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் இருப்பு உள்ளன. அனைத்து மக்களும் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இல்லை, எக்ஸ்.ரே பிலிம் இல்லை என பொய் புகார்களை சமூகவலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அதுபோன்ற நிலை தமிழ்நாட்டில் இல்லை. ஆதாயத்துக்காக திட்டமிட்டு பொய்யாக சிலர் வேண்டுமென்றே பரப்புகின்றனர். கேரளா எல்லைகளில் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய்த்தொற்றுகள் குறைந்த போதிலும் சோதனை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.
அவரைத் தொடந்து பேசிய மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னையில் நாளை 1600 தடுப்பூசி முகாம்கள் நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் ஒரு வார்டில் எட்டு முகாம்கள் நடைபெறும் என்றும் தெரிவித்தார். ஏற்கெனவே சென்னை மாநகராட்சியில் 83 விழுக்காடு நபர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளார்கள். மீதமுள்ள மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
அவரைத் தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், கோவை, திருப்பூர், சேலம் போன்ற மாவட்டங்களில் தொற்று அதிகரித்தபோது தடுப்பூசி செலுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு தொற்று குறைக்கப்பட்டது. எனவே தடுப்பூசி செலுத்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்படும் நோய் பாதிப்பு குறையும். எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்” எனக் கேட்டுகொண்டார்.
இதையும் படிங்க:வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: 8 மாவட்டங்களில் கன மழை