சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பரவல் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை சேத்துப்பட்டு சிக்னலில் காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது முகக்கவசம் அணியாமல் ஒரு பெண் நான்கு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அவரைத் தடுத்து நிறுத்திய காவல் துறையினர் 500 ரூபாய் அபராதம் விதிக்கப் போவதாகக் கூறியுள்ளனர்.
இதனால் கோபம் அடைந்த அந்தப் பெண் அவரது தாயைத் தொடர்புகொண்டு விஷயத்தைக் கூறி உள்ளார். விலை உயர்ந்த சொகுசு காரில் வந்த அவரது தாய், நடந்ததை எதைப்பற்றியும் கேட்காமல் காவல் துறையினரைக் கடுமையாகப் பேசியுள்ளார்.
காவல் துறையினரைக் கடுமையாகப் பேசிய பெண் வழக்கறிஞர்: வைரலாகும் காணொலி தானொரு வழக்கறிஞர் என்றும் அதனால் அபராதம் கட்ட முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும் முகக் கவசம் அணிய முடியாது எனக் கூறியும் காவலரை ஒருமையில் பேசி சாடியுள்ளார். காரின் நம்பரை வைத்து முகக்கவசம் அணியாததற்கு காவல் துறையினர் அபராதம் விதித்தனர்.
வழக்கறிஞர் ஒருவர் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொலி காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆனதையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக சேத்துப்பட்டு சட்டம் ஒழுங்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து உயர் அலுவலர்கள் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்துக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: எத்திசையும் தமிழ் மணக்க திமுக அரசு உழைத்திடும்: மு.க.ஸ்டாலின்