சென்னை: சென்னையில் மென்பொருள் நிறுவனங்கள் அதிகம் இருக்கும் சிறுசேரியை அடுத்த பொன்மாரில் டிசம்பர் 23ம் தேதி சனிக்கிழமை மாலையில் பெண் ஒருவரின் கூக்குரல் கேட்டுள்ளது. பெண் ஒருவர் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் தீயில் எரிந்து கொண்டிருப்பதைக் கண்டு பதறிப்போயினர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் சேர்ந்து அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தாழம்பூர் காவல்துறையினர் அளித்துள்ள தகவலின் பேரில், எரிந்த நிலையில் மீட்கப்பட்ட பெண் மருத்துவமனை வரும் போதே உயிரிழந்து விட்டார் எனவும், அந்த பெண் மதுரையைச் சேர்ந்த நந்தினி (27) எனவும் கூறினர். பெண்ணுடன் மருத்துவமனைக்கு வந்த வெற்றி மாறன் (27) என்ற நபரின் மீது சந்தேகம் எழுந்ததால் போலீசார் அவரை விசாரித்துள்ளனர். முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்த வெற்றி மாறன், பின்னர் ஒவ்வொரு உண்மையாக சொல்லத் தொடங்கியுள்ளார்.
வெற்றி மாறன் முதலில் பெண்ணாக நந்தினியுடன் ஒரே வகுப்பில் படித்து வந்துள்ளார். பருவமெய்தியதும் தனது பாலின வித்தியாசத்தை உணர்ந்த அந்த பெண் பின்னர் ஆணாக மாறி தனது பெயரை வெற்றி மாறன் என மாற்றிக் கொண்டுள்ளார். இதனை ஏற்காத அவரது குடும்பத்தினர் அவரை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர்.
சொந்த குடும்பத்தினரே துரத்திய போதும், வெற்றி மாறனின் நட்பை நந்தினி துண்டிக்கவில்லை. நந்தினியின் பெற்றோரும், குடும்பத்தினரும் வெற்றிமாறனை தங்கள் பிள்ளை போல அன்பு செலுத்தியுள்ளனர். நந்தினியின் மரணம் குறித்து சென்னை போலீசார் அவரது குடும்பத்திற்கு தகவல் கொடுத்த போதும் கூட, நந்தினியின் அக்கா சென்னையில் தொடர்பு கொண்ட முதல் நபர் வெற்றி மாறன் தான் என போலீசார் கூறுகின்றனர்.