சென்னை:தமிழ்நாடு எரிசக்தி துறையின் முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ், தனது பெயரை பீலா வெங்கடேசன் என மாற்றியதாக அறிவித்துள்ளது தற்போது பேசுபொருளாகி வருகிறது.
தமிழக அரசின் முன்னாள் சுகாதாரத்துறை செயலாளராக பதவி வகித்த வந்த பீலா ராஜேஷ் தனது பெயரை பீலா வெங்கடேசன் (Beela Venkatesan IAS) என மாற்றி கொண்டுள்ளதாக பிரபல நாளிதழ் ஒன்றில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனது கணவர் ராஜேஷ் பெயருக்கு பதிலாக தனது தந்தை பெயரான வெங்கடேசன் என்பதை தனது பெயருக்கு பின்னால் மாற்றியுள்ளார். பீலா ராஜேஷ்னுடைய தந்தை என்.எல்.வெங்கடேசன் தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
செங்கல்பட்டு துணை ஆட்சியராக இருந்த பீலா ராஜேஷ் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். குறிப்பாக, பீலா ராஜேஷ் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
குறிப்பாக, 2021ஆம் ஆண்டு கரோனா காலக்கட்டத்தின்போது, சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷின் பணி பெரிய அளவில் பாராட்டக்கூடியதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, கடந்த நவம்பர் மாதம் பணியிடமாற்றம் செய்யப்பட்ட பீலா ராஜேஷ், எரிசக்தி துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன்மைச் செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளராகவும் அவருக்கு பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
பீலா ராஜேஷின் கணவர் ராஜேஷ் தாஸ்: பீலா ராஜேஷ் கணவர் ராஜேஷ் தாஸ், தமிழக சிறப்பு டிஜிபியாக பதவி வகித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு டெல்டா மாவட்டங்களில் அப்போது முதலமைச்சராக பதவி வகித்த எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தபோது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிப்பதற்காக ராஜேஷ் தாஸ் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.