சென்னை: இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் மற்றும் பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கம் சார்பின் பிரதிநிதிகள் தரப்பில், “தற்போது சிறிய ரத்த பரிசோதனை நிலையங்களை பதிவு செய்வதற்கு ரூபாய் 5,000 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. அதை ரூபாய் 1,000ஆக குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கட்டணத்தை குறைக்கப்பதாக கடந்த மார்ச் 13ஆம் தேதியன்று, சென்னையில் நாங்கள் நடத்திய NABL விழிப்புணர்வு கூட்டத்தில் அறிவித்தார். இதற்கு நாங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். அமைச்சரின் அறிவிப்பை உடனடியாக நடைமுறைப்படுத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
மருத்துவ ஆய்வகங்களில் எடுக்கப்படும் மருத்துவ கழிவுகளுக்கு, பயோ வேஸ்ட் அகற்றும் தனியார் நிறுவனங்கள் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றார்போல் கட்டணங்களை நிர்ணயிக்கின்றன. பல இடங்களில் கட்டணங்கள அதிகமாக வசூலிக்கப்படுகின்றன. இதனால் சிறிய கிளினிக்கள், லேப்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, இக்கட்டணங்களை தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஆய்வகங்களுக்கும் ஒரே சீராக நிர்ணயிக்க வேண்டும்.
இதற்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்கான கட்டணத்தையும் குறைத்திட வேண்டும். நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மருத்துவக் கழிவுகளை அகற்றும் முறையை தமிழ்நாடு அரசு கொண்டுவர வேண்டும்.