சென்னை - எம்ஜிஆர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடக்கவிருக்கும் பெற்றோர்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், இணை இயக்குநர் (மேல்நிலை கல்வி) குமார் ஆகியோர் கொட்டும் மழையில் வந்து ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் கூறியதாவது, 'தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுக்கிணங்க பொங்கலுக்குப் பின்னர், பள்ளி திறப்பது குறித்து பெற்றோர்களிடம் எட்டாம் தேதி வரை கருத்துக் கேட்கும் கூட்டம் நடைபெற உத்தரவிடப்பட்டுள்ளது.
பெற்றோர்களின் கருத்தின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு:
பள்ளிகளில் கருத்துக் கேட்பதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கல்வித் துறை அலுவலர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். கருத்துக் கேட்பு பெற்றோர்களிடமிருந்து பெறப்படும் கருத்தின் அடிப்படையில் பள்ளி திறப்பது குறித்து முதலமைச்சர் முடிவு செய்து அறிவிப்பார்.
ஏற்கெனவே நவம்பர் மாதம் பள்ளிகள் திறப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியிருந்தோம். இந்நிலையில், மாவட்டக் கல்வி அலுவலர்கள் பள்ளிகளில் இருக்கக்கூடிய கட்டடங்களின் உறுதித் தன்மையை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார்.
பள்ளியை ஆய்வு செய்த பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி, சிபிஎஸ்இ பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என 12 ஆயிரம் பள்ளிகளில் இந்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பள்ளி திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம்