சென்னை:இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. இந்த உயர்த்தப்பட்ட கட்டண நடைமுறை நள்ளிரவு முதல் (ஏப்ரல் 1) அமலுக்கு வருகிறது. அந்த வகையில், 5-15 விழுக்காடு வரை கட்டணங்கள் உயருகின்றன. அதன்படி ரூ. 5 முதல் ரூ.55 வரை கட்டணம் உயர வாய்ப்புள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் முதல்கட்டமாக 29 சாவடிகளில் மட்டுமே கட்டணங்கள் உயர்கின்றன. சென்னையை சுற்றி உள்ள பரனூர், வானகரம், சூரப்பட்டு, செங்குன்றம், பட்டறை பெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும்.
அதன் காரணமாக சென்னையில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் முக்கிய மாவட்டங்களான மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் உயர்த்தப்பட்ட வரியை கட்ட வேண்டும். இந்த கட்டண உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த கட்டண உயர்வுக்கு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ந.ஜெகதீசன் கண்டனம் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் முன்னதாக வெளியிட்டிருந்த அறிக்கையில், "இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் வாகனக் கட்டணத்தை ரூ.5 முதல் ரூ.55 வரை உயர்த்த உள்ளது.
தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கீழ் தமிழ்நாட்டில் 55 சுங்கச்சாவடிகள் உள்ளன. அதில் 29 சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 1 ஆம் தேதியும், மீதமுள்ள சுங்கச் சாவடிகளில் செப்டம்பர் 1 ஆம் தேதியும் கட்டணம் உயர்கிறது. இது லாரி, பேருந்து, கார் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களின் நிதிச் சுமையை அதிகரிக்க உள்ளது.
காய்கறிகள், பழங்கள், சமையல் எண்ணெய், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமல்லாது கட்டுமானப் பொருட்களின் விலையையும் அதிகரிக்க செய்யும். சொல்லப்போனால், 60 கி.மீ இடைவெளியில் டோல்கேட் அமைக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் 60 கி.மீ இடைவெளியில் 16 சுங்கச் சாவடிகள் உள்ளன. இவை அகற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வரும் நிலையில், கூடுதல் கட்டணம் விதிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் 29,666 கி.மீ நீளத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இதனிடையே 566 சுங்கச்சாவடிகள் உள்ளன. அதில் அதிகமாக தமிழ்நாட்டில் மட்டும் 55 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகள் வழியாக நாள்தோறும் சுமார் 64.50 லட்சம் வாகனங்கள் செல்கின்றன. சுங்கச்சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் சுங்கக் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், இவை பின்பற்றப்படுவதில்லை" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க:சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு - தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கடும் எதிர்ப்பு