தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் செல்வம், மாநில தலைவர் அன்பரசு ஆகியோர் இன்று (டிசம்பர் 30) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசிடம் தொடர்ந்து முறையிட்டு வருகிறோம். ஆனால் எங்களின் கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 2019ஆம் ஆண்டு 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோம். அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் ஆசிரியர்கள் மீது 17 பி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை அரசு திரும்ப பெறவேண்டும்.
தமிழ்நாடு அரசு துறையில் காலியாக உள்ள நாலரை லட்சம் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஜனவரி 5ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் பரப்புரை இயக்கமும், ஜனவரி 19, 20ஆம் தேதிகளில் மண்டல அளவில் போராட்ட ஆயத்த மாநாடுகளும் நடத்தப்படும்.