சென்னைமற்றும் புறநகர் பகுதி மக்களுக்கு பல்லாவரம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது வாரம்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் வாரச்சந்தைதான். பல்லாவரம் வாரசந்தை மிகவும் பழமையானது மட்டுமல்லாமல் இது சென்னை வாழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாகும்.
200 ஆண்டுகளுக்கு பழமையான பல்லாவரம் சந்தை முதலில் ஆங்கிலேயர்கள் மாட்டுச் சந்தையாக நடைபெற்று வந்து உள்ளது. அதன் பின் காலப்போக்கில் பழைய மற்றும் புதிய பொருட்களின் விற்பனை நிலையங்களாக மாறியுள்ளது.
ஏழைகளின் சூப்பர் மார்க்கெட்: பல்லாவரம் வாரசந்தை திரிசூலம் மற்றும் பல்லாவரம் ரயில் நிலையம் இடையில் ரயில் தண்டவாளம் ஓரமாக உள்ள டங்க் ரோட்டில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும். இந்த வாரசந்த்தையில் கணினி முதல் கருவாடு வரை, பானை முதல் பிரிஜ் வரை விற்கப்படாத பொருட்களே இல்லை. இந்த பழைய மற்றும் புதிய பொருட்கள் சந்தை ஏழைகளின் பிரம்மாண்டமான சூப்பர் மார்க்கெட்டாக உள்ளது.
இச்சந்தையில் பழைய பொருட்களுக்கு மிகவும் பிரபலமானது. அதில், பழைய கணினிகள், செல்போன், உதிரிபாகங்கள், வீட்டில் பயன்படுத்தக்கூடிய மேசைகள், கட்டில், சோபா செட், வெல்டிங் மெஷின்கள், எல்இடி டிவி, பழங்கால நாணயம் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் காண முடியும், அதை மிக குறைந்த விலைக்கு வாங்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு.
காய்கறிகள் முதல் கத்தி வரை:பழைய பொருட்களைத் தாண்டி புதிய பொருட்களும், காய்கறிகள், பூச்செடிகள், வீட்டு உபயோக பொருட்கள், செல்லப் பிராணிகள், மளிகை பொருட்கள் என அனைத்து பொருட்களும் கிடைக்கக்கூடிய இடமாக திகழ்கிறது. விவசாயிகளுக்குத் தேவையான அரிவாள், சமையலறை கத்தி, கதிர் அரிவாள், தொரடு கொக்கி, மண்வெட்டி, கடப்பாரை அனைத்தும் கிடைக்கின்றன.
கிராம சந்தை: சாப்பிடும் வகைகளுக்கும் பஞ்சமில்லை, அதில் அடிக்கிற வெயிலுக்கு இதம் தரும் விதமாக கரும்புச்சாறு, ஐஸ்கிரீம், இளநீர், கோலி சோடா, பாதாம் பால் மற்றும் பல கடைகளில் பிரியாணி சுடச்சுட விற்பனையாகிறது. கிராம சந்தை, சென்னையில் பெரிய மார்க்கெட், ரிச்சி ஸ்ட்ரீட், புதுப்பேட்டை, கோயம்பேடு, கொத்தவால் சாவடி, பாரீஸ் கார்ணர் வண்ணாரப்பேட்டை, சரவணா ஸ்டோர், கேகே நகர் கட்டட பாகங்கள் சந்தை, மூலக் கொத்தளம் கருவாட்டு மண்டி என எல்லா சிறப்பு மார்க்கெட்டுகளையும் கலந்த ஓர் இடமாக பல்லாவரம் வார சந்தை உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஏழை, நடுத்தர மக்கள் மட்டுமல்லாமல் பணக்காரர்களும் கார்களில் வந்து வெள்ளிக்கிழமை வாரச் சந்தையில் பொருட்களை வாங்கி செய்கின்றனர். இதற்கு இங்கு விலை மிகவும் மலிவாகக் கிடைக்கும் என்பதே காரணம். கடந்த இரண்டு வருடங்களாக கரோனா தொற்றின்போது பல்லாவரம் வார சந்தை முற்றிலும் முடங்கிப் போனது. பின்னர் படிப்படியாக குறைந்த எண்ணிக்கையில் கடைகள், குறைந்த மக்கள் வருகை என சந்தை மீண்டும் எழுச்சி பெற்று தற்போது பழைய நிலைமைக்கு திரும்பி உள்ளது.
இதனிடையே, பல்லாவரம் வாரச் சந்தை வியாபார சங்கத்தின் தலைவர் இஸ்மாயில் கூறுகையில், "பல்லாவரம் வாரச் சந்தை நடைபெறும் இடம் பல்லாவரம் கன்டோன்மென்ட் பகுதிக்கு உட்பட்டது. இதனை ஆண்டுதோறும் தனியாருக்குக் குத்தகைக்கு விடுவார்கள். அவர்கள் மூலம் வாரச்சந்தையில் பணத்தை வசூல் செய்துகொள்வார்கள். பல்லாவரம் வார சந்தை சிறப்பானது ஏழை, எளிய மக்கள் ஐநூறு ரூபாயை வைத்துக்கொண்டு ஒரு வாரத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்க முடியும்.
அனைத்து பொருட்களும் :இந்த சந்தையில் குண்டூசி முதல் அனைத்து வகையான பொருட்களும் கிடைக்கக்கூடிய இடமாக இது உள்ளது. வெளி கடைகளில் 10,000 ரூபாய் கிடைக்கக்கூடிய புதிய பொருட்கள் கூட வாரச்சந்தையில் பாதிக்குப் பாதியாகக் குறைக்கப்பட்டு விற்கப்படுகிறது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் சந்தையில் குறைந்தது 40 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். சென்னை சுற்றுவட்டாரத்தில் அனைத்து பொருட்களும் கிடைக்கக் கூடிய ஒரே இடமாக பல்லாவரம் சந்தை உள்ளது.
சென்னை மட்டுமல்லாமல் கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களில் இருந்து பல்லாவரம் வாரசந்தைக்கு வந்து குறைந்த விலையில் பொருட்களை வாங்கிச் சென்று அவர்கள் சொந்த கடைகளில் அதிக லாபத்திற்கு விற்பனை செய்வார்கள். பல்லாவரம் வாரச் சந்தை வியாபாரிகள் சார்பாக கன்டோன்மென்ட்க்கு சில கோரிக்கைகளை வைத்து உள்ளோம். கோடைகாலம் என்பதால் சந்தை நடைபெறும் அன்று கன்டோன்மென்ட் சார்பாக குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
மேலும் சந்தை நடைபெறும் சாலை முழுவதும் தெரு விளக்குகள் அமைத்துத் தரவேண்டும் என நீண்ட கால கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம். அதேபோல் வாரச் சந்தை நடைபெறும் டிரங்க் ரோடு அருகாமையிலுள்ள ஜிஎஸ்டி சாலையில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை இருவழிச் சாலையாக மாற்ற வேண்டும். அப்படி மாற்றுவதன் மூலம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருப்பதோடு வியாபாரிகளும் பாதிக்கப்படாமல் இருப்பார்கள்" எண்டு கூறினார்.
கிடைக்காத பொருட்கள் கூட :மேலும் வியாபாரி பாஷா பேசிய போது, பொதுமக்கள் நேரடியாக சந்தைக்கு வந்தால் அவர்கள் எதிர்பார்க்காத பொருட்களும் கிடைக்கும்" என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பேசிய வாடிக்கையாளர் சீனிவாசன், "பல்லாவரம் சந்தையில் மனிதர்களைத் தவிர மற்ற அனைத்து பொருட்களும் கிடைக்கும், வெளியில் கிடைக்காத பொருட்கள் கூட இங்கு மலிவான விலைகளில் கிடைத்துவிடும்" என்றார்.
வாடிக்கையாளர் ரமேஷ் குமார் கூறுகையில், "A to Z என அனைத்துப் பொருட்களும் பல்லாவரம் சந்தையில் கிடைக்கும், எங்களைப் போன்ற அடித்தட்டு மக்களுக்கு பல்லாவரம் வாரச்சந்தைக் கிடைத்தது வரப்பிரசாதமாகத் தான் பார்க்கிறோம். அடித்தட்டு மக்கள் மட்டும் இல்லாமல் பெரிய பெரிய விஐபி கூட இங்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்ட சந்தை தற்போது செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது" என கூறினார்.
இதையும் படிங்க: "சந்தை வாய்ப்பு" மற்றும் "தேவை" - பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் முக்கியக் காரணிகள்