சென்னை : காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்துறை அலுவலகத்தில் பணியாற்றிய மாற்றுத்திறனாளி ஊழியர் சரண்யா, இயற்கை உபாதையை கழிக்க அருகில் உள்ள வீட்டிற்கு சென்றபோது, அங்கிருந்த கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த நிகழ்வை மேற்கோள்காட்டி, சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் கற்பகம் என்பவர் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்திருந்தார்.
அம்மனுவில், “அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வகை செய்யும் சட்டம் 1995 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட போதும், கடந்த 25 ஆண்டுகளாக காகித அளவிலேயே இருக்கிறது.அதேபோல, அனைத்து அரசு அலுவலகங்களிலும் கழிவறை, குடிநீர் வசதிகள் மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் அமைக்கப்பட வேண்டும். கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சரண்யாவுக்கு இதுவரை எந்த நீதியும் கிடைக்கவில்லை. அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரப்பட்டுள்ளது.