சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் கடந்த 8ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து முதற்கட்டமாக கோட்டூர்புரம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் கேரள முதலமைச்சர் பினராய் விஜயனைச் சந்தித்து தற்கொலை தொடர்பான, செல்போன் பதிவுகளுடன் புகார் அளித்தார். இதனையடுத்து சென்னை காவல் துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் வழக்கை, மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் இந்த தற்கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், இன்று ஃபாத்திமா லத்தீப்பின் செல்போனை தடயவியல் துறை அலுவலகத்தில், அவரது தந்தை அப்துல் லத்தீப் முன்னிலையில் திறந்து காண்பிக்க உள்ளனர்.