சென்னை:செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பெரியார் தெருவைச் சேர்ந்தவர், வருண் (20). இவரும் மீனம்பாக்கத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி (20) என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து இருவரும் அவ்வப்போது தனிமையிலும் இருந்து வந்துள்ளனர். இதனால், விஜயலட்சுமி கர்ப்பம் ஆகியுள்ளார். எனவே காதலன் வருண், தனது வீட்டிற்குத் தெரியாமல் விஜயலட்சுமியை திருமணம் செய்து கொண்டது மட்டுமல்லாமல், அவரை மாடம்பாக்கம் அருகே தனியாக தங்க வைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இவர்களுக்கு கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு, ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த நிலையில் விஜயலட்சுமி, வருணின் வீட்டிற்கு தன்னையும், குழந்தையையும் அழைத்துச்செல்லுமாறு வருணிடம் கூறியுள்ளார். இதனையடுத்து வருண், தனது பெற்றோரிடம் தனக்குத் திருமணம் ஆகியதாகவும், தற்போது 4 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளதாகவும், தான் திருமணம் செய்து கொண்ட பெண்ணை மாடம்பாக்கம் அருகே தங்க வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வருணின் பெற்றோர், திருமணம் செய்து கொண்ட விஜயலட்சுமி மற்றும் இருவருக்கும் பிறந்த ஆண் குழந்தையை எங்கேயாவது விட்டுவிட்டு வருமாறு கூறியுள்ளனர். இதனால் விஜயலட்சுமியிடம் இருந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனக்கு பிறந்த குழந்தையை வாங்கிய வருண், தனது நண்பருக்கு குழந்தை இல்லாததால் அவரது வீட்டில் குழந்தை வளரட்டும் எனக் கூறியுள்ளார்.