தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 10, 2021, 2:39 PM IST

ETV Bharat / state

தந்தையைக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை உறுதிசெய்த உயர் நீதிமன்றம்

கோவையில் குடும்பத் தகராறில் தந்தையை மண்வெட்டியால் அடித்துக் கொன்ற மகனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதிசெய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Father killed by son uphold lower court life sentence MHC
தந்தையை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்த உயர் நீதிமன்றம்

சென்னை:கோவை மாவட்டம், தளவாய்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மயில்சாமி, தனது மனைவி, மகன், மருமகள், பேத்தியுடன் வசித்துவந்தார். மயில்சாமியின் மகன் கனகராஜ், குடித்துவிட்டு வந்து அடிக்கடி தந்தையிடம் தகராறு செய்துவந்துள்ளார்.

2012 ஏப்ரல் 1ஆம் தேதி தந்தைக்கும், மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, சொத்து எதையும் தரப்போவதில்லை என மயில்சாமி, கனகராஜிடம் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கனகராஜ், தென்னந்தோப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மயில்சாமியை மண்வெட்டியால் அடித்துக் கொலைசெய்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக பதிவுசெய்யப்பட்ட வழக்கை விசாரித்த கோவை நீதிமன்றம், கனகராஜுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து கனகராஜ் தாக்கல்செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஆர். பொங்கியப்பன் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் பல்டி அடித்துவிட்டதாலும், வழக்குத் தொடர்பான ஆவணங்கள் தாமதமாக நீதிமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாலும் சந்தேகத்தின் பலனை கனகராஜுக்கு வழங்க வேண்டும் என அவர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், நேரில் பார்த்த சாட்சிகள் பல்டி அடித்திருந்தாலும், கனகராஜின் மனைவியும், மாமனாரும் நடந்த சம்பவத்தை விளக்கி சாட்சியம் அளித்துள்ளதாகவும், ஆவணங்களை உடனடியாக நீதிமன்றத்திற்கு அனுப்பிவைக்காததால் இந்தச் சம்பவத்தை நம்ப முடியாது எனக் கூற முடியாது எனக் கூறி மேல் முறையீட்டு வழக்கைத் தள்ளுபடிசெய்து கனகராஜுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதிசெய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இதையும் படிங்க:தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவு நாடு முழுவதும் பொருந்தும் - உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details